வெள்ளி, ஏப்ரல் 15, 2011

வரப்போகிறது புதிய (சட்ட) சாராய சபை...

 டாஸ்மாக்: ஜெயலலிதாவின் விட பன்மடங்கு ஊழல்களைச் செய்து தன் குடும்பத்தார் எல்லாரையும்  கோடீசுவரர்களாக்கிய கருணாநிதி சென்ற தேர்தலில் அறிவித்த இலவசத் திட்டங்களை விட இப்போது பல புதிய கவர்ச்சிகரமான இலவசங்களை அறிவித்துள்ளார்.

ஏட்டிக்குப் போட்டியாக ஜெயலலிதாவும் இலவச திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த இலவசங்களை யெல்லாம் தனது பரம்பரை சொத்திலிருந்தோ அல்லது மனைவி தயாளு அம்மையாரும், ராஜாத்தி கொண்டு வந்த தாய்வீட்டு சீதனத்திலிருந்தோ, கொடுக்கப் போவதில்லை.

மக்களிடமிருந்து பணத்தை பறித்தெடுத்துத்தான் இந்த “இலவசங்கள்” மக்களுக்கு வழங்கப்படுகின்றன. டாஸ்மாக் சாராயக் கடைகள் மூலம் உழைக்கும் மக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகின்றது.


அரசு நிறுவனமான டாஸ்மாக் 1983-84இல் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீட்டுத் தொகை ரூ15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 15,000 கோடி. 25 ஆண்டுகளில் 107 மடங்கு வளர்ச்சி. இந்தியாவில் எந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு சுமார் ரூ. 15,000 கோடியும், இலவச தொலைக்காட்சி திட்டத்திற்கு ரூ. 4500 கோடியும், இலவச கேஸ் அடுப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ. 650 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இன்னும் இருக்கின்ற பிற இலவச திட்டங்களுக்கும் சேர்த்துப் பார்த்தால் கூட கடந்த ஐந்தாண்டுகளில் கருணாநிதி அரசு வழங்கிய இலவச திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி அதிகபட்சம் ரூ. 40,000 கோடியைக்கூட தாண்டாது. அரசுக்கு குறைந்தது ரூ. 10,000 கோடி டாஸ்மாக் சாராய விற்பனை மூலம் ஆதாயம் கிடைத்திருகிறது.

“குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி கொலை, குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை, குடிபோதையில் மனைவி, குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி” என அன்றாடம் மூன்று நான்கு செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன.

அண்மைக் காலமாக பாதிக்கு மேற்பட்ட குற்ற நிகழ்வுகள் குடிபோதையினால் நடந்தவையே! அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் வரதட்சணையை விட குடிபோதையில் பெண்களை துன்புறுத்தும் கணவன்மார் மீதான புகார்கள் தான் மொத்தப் புகார்களில் 80% இருக்கின்றது.

நெடுஞ்சாலை விபத்துகள் பல குடிபோதையில் ஏற்படுபவையே! நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதன் விளைவாக ஏற்பட்ட ஒரு விபத்தில் 28 பேர் இறந்தனர், 35 பேர் பலத்த காயமடைந்தனர்.

இன்னும் பலருக்கு சிறுகாயங்கள், விபத்துக்கு காரணம் சரக்கு ரயிலின் ஓட்டுனர் நினைவை இழந்து போகும் அளவுக்கு குடித்திருந்ததுதான் என்று பின்னர் நடந்த மருத்துவ ஆய்வு தெரிவித்தது. தொடர்ச்சியான மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவைகளின் காரணமாக தமிழ்நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு  குறிப்பாக நகர்ப்புறங்களில்  அதிகரித்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் எதிர்கால தலைமுறையே சீரழிந்து நாசமாய் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிபோதையினால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, மரணங்கள் மூலம் இழப்பு, குடியினால் வரும் உடல்நலக் கேட்டிற்கு மருத்துவம் செய்ய செலவிடும் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டால் மது விற்பனையில் வரும் வருவாயைவிட அதிகம் இருக்கும்.

‘குடி’மக்கள் குடிப்பதை நிறுத்தினால் அதனால் அவர்களின் குடும்ப சேமிப்பு நடக்கும். அல்லது குடிப்பதற்கு செலவிடப்படும் பணம் பிற பயனுள்ள பொருட்களை வாங்க பயன்படுத்தப்படும். இந்த விற்பனை மூலம் மறைமுக வரியாக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வருவாய் கிடைக்கும். பண்பாட்டு சீரழிவும் நோய்களும் மரணங்களும் குறையும்.

இவை பற்றியெல்லாம் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் எந்தக் கூட்டணியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று சொல்லவில்லை. மாறாக, போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் அறிவிக்கின்றன.

சாராய விற்பனை  டாஸ்மாக் மூலம் இளம் தமிழச்சிகளின் தாலியறுத்து, இளம் தலை முறையினரையே சீரழித்து, சின்னாபின்னமாக்கி, குடிகார கணவன்களால் பெண்கள், குழந்தைகளின் மன அமைதியை இழக்க வைத்து, அவர்களை அன்றாடம் சித்திரவதைக் குள்ளாக்கி அந்த அவலம், சோகம், கண்ணீரிலிருந்து கறக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, பறி கொடுத்த மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மடிக் கணினி போன்றவைகளை இலவசமாக தருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?.

எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றம்? எவ்வளவு பெரிய கொடூரம்? பதவிக்கு வந்து மக்கள் பணத்தை பகற்கொள்ளையடிக்கவும் சாராய அதிபர்கள் பெரும் இலாபம் ஈட்டவும் கொடுக்கப்படும் இந்த இலவசங்கள் ஏதோ அந்தக் கூட்டணித் தலைவரின் தயாள குணத்திலிருந்து பிறந்த மக்கள் மீதான பாசம், பரிவு என்றெல்லாம் சித்தரித்து ஓட்டு கேட்பது எவ்வளவு பெரிய மோசடி? எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? எவ்வளவு பெரிய வக்கிரம்?

நன்றி: வினவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக