ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

இலங்கையில் அரங்கேறிய பயங்கரங்கள்-ஐ.நா. குழு அறிக்கை 'லீக்'!


Srilanka Killings
ஐ.நா: இலங்கையில் கடைசிக் கட்ட போரின்போது கொடூரமான கொலைகள், கற்பழிப்புகள் உள்பட மிக பயங்கரமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டில் 4 மாதங்களில் பல்லாயிரணக்கான தமிழர்கள் கொத்து, கொத்தாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு ஐ.நாவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

புலிகளுக்கு எதிரான கடைசி கட்ட போரில் நடந்த கொடூரங்கள் தொடர்பாக உலகெங்கும் கடும் கண்டனங்களும், இந்த விவகாரத்தில் ஐ.நா. அமைதி காத்தது தொடர்பாக எதிர்ப்பும் கிளம்பியதையடுத்து இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன்.


இந்தக் குழு தனது அறிக்கையை பான்-கி-மூனிடம் சமர்ப்பித்துள்ளது. அதை இன்னும் அவர் வெளியிடாத நிலையில், அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் 'லீக்' ஆகியுள்ளன.

அதில், இறுதிக் கட்ட போரின்போது சர்வதேச சட்டங்களை இலங்கை அரசு காலில் போட்டு மிதித்துள்ளது. கண்மூடித்தனமான கொலைகள், கற்பழிப்புகள், மிருகத்தனமான கொடூரங்களை இலங்கை ராணுவம் அரங்கேற்றியுள்ளது. பொது மக்களும் அப்பாவி மக்களும் திரண்டிருந்த இடங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதோடு, no-fire zones என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பள்ளிகள், முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைதிப் பகுதிகளிலும் மிக பயங்கரமான ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவத் தாக்குதலில் இருந்து மக்கள் தப்பியோட முடியாத வகையில் அவர்களை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தி மனித கேடயங்களாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்தக் கொடூரங்கள் வெளியுலகுக்குத் தெரிந்துவிடாத வண்ணம் பல வகையான அடக்குமுறைகளிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இந்தக் கொலைகள் குறித்து தகவல்கள் வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை அரசே கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் பலர் மாயமாகிவிட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

முழு விசாரணை நடத்த ஆம்னெஸ்டி கோரிக்கை:

ஐ.நா. குழு வெளியிட்டுள்ள இந்தப் புகார்களை இலங்கை அரசு ஒதுக்கித் தள்ளிவிட்டு தப்பிவிட முடியாது என ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அன்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யோலாண்டா பாஸ்டர் கோரியுள்ளார்.

மின்சார நாற்காலி தண்டனைக்கும் தயார்-ராஜபக்சே:

இந்தப் புகார்களை இலங்கை அரசு வழக்கம்போல் மறுத்துள்ளது.

தேசத்துக்காக மின்சார நாற்காலி தண்டனை அளிக்கப்பட்டாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

அதிபர் மாளிகையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை தாங்க முடியாத சிலர் சர்வதேச அளவில் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குறுகிய அரசியல் லாபத்துக்காகவே சிலர் தாய் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக