செவ்வாய், ஏப்ரல் 26, 2011

கல்மாடி.. கஸ்டடி.. செருப்படி...

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் கல்மாடி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பொது செயலாளர் ஜனார்த்தன துவிவேதி, கட்சிப்பதவிகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சுரேஷ் கல்மாடி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதே, காங்கிரஸ் கட்சி செயலாளர் பொறுப்பிருந்து அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஒலிம்பிக் சங்க தலைவர் பொறுப்பிலிருந்தும் அவரை நீக்க வேண்டுமென மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் பரிந்துரைத்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற காமன்வெல்த் போட்டிகளில் நடந்தேறிய ஊழல் தொடர்பில், 6 வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


காமன்வெல்த் போட்டிக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து டைமர் கருவிகளை வாங்கியதில் சுரேஷ்கல்மாடி ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. முதலில் டெண்டர் கோரப்பட்டதில் பல்வேறு நிறுவனங்கள் கருவிகளை தர முன்வந்தன. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.எல். என்ற நிறுவனம் ரூ. 48 கோடிக்கு கருவிகளை தர சம்மதித்து இருந்தது. ஆனால் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுவிஸ் டைமிங் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ரூ. 107 கோடிக்கு கான்ட்ராக்ட் பணி வழங்கப்பட்டது. குறைந்த விலைக்கு முன்வந்த எம்.எஸ்.எல். நிறுவனத்தை புறக்கணித்தார்.

கோடிக்கணக்கில் ஊழல் செய்த கல்மாடியை 9 மாதம் கழித்து சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்மாடியை 14 நாள் கஸ்டடியில் ஒப்படைக்க வேண்டும் என சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோரினர். இதற்கு கல்மாடியின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
இவர் கைது செய்யப்பட்டதில் சட்டமீறல்கள் நடந்திருக்கின்றன என்றார். அப்போதைய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கஸ்டடிக்கு அனுப்பக்கூடாது ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் வக்கீல் வலியுறுத்தினார். தொடர்ந்து கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது .

இன்று பாட்டியாலா கோர்ட்டுக்கு ஆஜர்படுத்த கொண்டு வந்தபோது பார்வையாளர்களாக நின்ற பலர் எதிர்ப்பு குரல் எழுப்பினர். தொடர்ந்து ஆவேசமுற்ற ஒருவர் ஓடி போய் கல்மாடியை செருப்பால் அடிக்க முயன்றார். கல்மாடி மீது செருப்பு வீசப்பட்டதால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. அதற்குள் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கபில்தாக்கூர் என தெரியவந்துள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக