ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

அஹ்லே ஹதீஸ் தலைவர் மெளலவி ஷவ்கத் ஷா குண்டுவெடிப்பில் பலி

_52063017_52063016
ஸ்ரீநகர்:பிரபல மார்க்க அறிஞரும், ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் இயக்கத்தின் தலைவருமான மெளலவி ஷவ்கத் ஷா ஸ்ரீநகரில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானார்.
நேற்று மதியம் 12.30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மைசூமா பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதில் ஜும்ஆ தொழுகைக்கு தலைமை வகிக்க வந்துக்கொண்டிருந்தார் ஷவ்கத் ஷா. குண்டுவெடிப்பில் கடுமையாக காயமுற்ற மெளலவி ஷவ்கத் ஷாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும் அங்கு அவர் மரணமடைந்துவிட்டார். குண்டுவெடிப்பில் காயமுற்ற இளைஞர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மஸ்ஜிதுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக கருதப்படுகிறது. நாட்டு வெடிக்குண்டை தாக்குதலுக்கு பயன்படுத்தியிருப்பதாக போலீஸ் கூறுகிறது.ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸீன் மாலிக்குடன் நெருங்கிய தொடர்புடையவர்தாம் மெளலவி ஷவ்கத் ஷா. இவருக்கெதிராக பல தடவை தாக்குதல்கள் நடந்துள்ளன. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து லால்சவுக்கிலும், சமீப பிரதேசங்களிலும் பள்ளிக்கூடங்களும், வியாபார ஸ்தாபனங்களும் மூடப்பட்டன. மெளலவியின் மரணச்செய்தி வெளியானதை தொடர்ந்து மக்கள் வீதிகளிலிருந்து வீடுகளுக்கு திரும்பினர்.எந்த சூழலையும் எதிர்கொள்ள போலீஸ் அதீத எச்சரிக்கையுடன் இருப்பதாக மூத்த அதிகாரி அறிவித்தார்.
மெளலவி ஷவ்கத் ஷாவின் படுகொலையை கஷ்மீரில் பல்வேறு தலைவர்கள் கண்டித்துள்ளனர்.ஷவ்கத் ஷாவின் படுகொலை மனித தன்மைக்கு ஒவ்வாத செயல் என ஹுர்ரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர் மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்துள்ளார். இன்று கஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் அவர்.
தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி, பீப்பிள்ஸ் டெமோக்ரேடிக் கட்சியின் தலைவர்களான முஃப்தி முஹம்மது சயீத், மெஹ்பூபா முஃப்தி, சி.பி.எம் மாநில செயலாளர் முஹம்மது யூசுஃப் தரிகாமி, கஷ்மீரி பண்டிட் சங்கர்ஷ் சமிதி ஆகியோர் மெளலவி ஷவ்கத் ஷாவின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Thoothuonline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக