ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

மீண்டும் கலவர பூமியானது தஹ்ரீர் சதுக்கம் : முபாரக் மீது வழக்கு தொடர கோரி ஆர்ப்பாட்டம்!


முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து,அவர்களை சிறையில் அடைக்க வேண்டுமென கோரி, எகிப்து தலைநகர் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான எகிப்திய மக்கள் கலந்துகொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தை அடக்கும் வகையில் இராணுவம் மேற்கொண்ட அடிதடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டு வீச்சுதாக்குதலில் பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 11ம் திகதி ஹோஸ்னி முபாரக் அதிபர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு, இராணுவம் அரசை பொறுப்பேற்றது முதல், இடம்பெறும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக இது கருதப்படுகிறது.

ஹோஸ்னி முபாரக் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டு அவருக்கு முழுமையான தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்ட காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பல நூற்றுக்கணக்கான இராணுவ அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை கட்டுபடுத்தும் முகமாக இன்று அதிகாலை ஊரடங்கு சட்டமும் பிரயோகிக்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம், ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக தஹ்ரீர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பல முக்கிய நபர்கள், வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் பெயரில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக தகவல்கள் வந்த நிலையில், ஹோஸ்னி முபாரக் மருத்துவ சிகிச்சைக்காக ஜேர்மனி சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வெறுமனே பதவிலிருந்து விலக்கியது மாத்திரம் முபாரக்கிற்கு கொடுக்கபப்டும், சரியான தண்டனையாக அமையாது. அவர் செய்த ஊழலுக்கு மக்கள் தண்டனையை அனுபவிப்பதா என ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கிய இளைஞர்கள் கோஷமெழுப்பினர்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக