ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

சர்வதேச அளவில் அரசியல், பொருளாதார விவகாரங்களில் இணைந்து செயல்பட ப்ரிக்ஸ் நாடுகள் தீர்மானித்துள்ளன.

ஏப்ரல் 16, பீஜிங்:  சீனாவின் ஸான்யாவில் நடக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ப்ரிக்ஸின் உச்சிமாநாட்டில் இதுத்தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயம், பொருளாதாரம், விளையாட்டு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு, உணவு, எரிபொருள் சவால்கள், உணவு பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கெதிரான போராட்டம் ஆகிய விவகாரங்களில் இதர நாடுகளுடன் ஐக்கியத்துடன் செயல்படுவதற்கான திட்டம் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.


ஐக்கியநாடுகள் போன்ற உலக அமைப்புகள் போதுமான பிரதிநிதித்துவத்துடன் சீர்திருத்தப்பட வேண்டுமென உச்சிமாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தினார். உறுப்பு நாடுகள் சந்திக்கும் பொருளாதார-அரசியல் சவால்களை பரிசீலிப்பதற்கு பரஸ்பர உதவியை வலுப்படுத்த மாநாட்டில் தீர்மானித்துள்ளதாக பிரதமர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

ப்ரிக்ஸ் உறுப்புநாடுகள் அவர்களுடைய உள்நாட்டு நாணயத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. நிதியியல் சேவைகளிலும், முதலீட்டு பங்குச் சந்தையிலும் ஒத்துழைப்பைஅதிகரிக்க தீர்மானிக்கப்பட்டன.

இந்தியாவும், சீனாவும் சக்தி திறன் ஒத்துழைப்பை வலுப்படுத்த தீர்மானித்துள்ளதாக சீனாவில் இந்திய தூதர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க ஆதரவு அளிப்போம் என சீனா அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக