செவ்வாய், ஏப்ரல் 26, 2011

குஜராத்இனப் படுகொலை- சிறப்பு புலனாய்வுக்குழு சாட்சிகளை மிரட்டியுள்ளது.

APRIL , புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழு சாட்சிகளை மிரட்டியுள்ளது.

மேலும் புலனாய்வுத் தொடர்பான விபரங்களை குஜராத் அரசுக்கு கசியச் செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்தில் ஐ.ஜி.சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலங்களை பதிவுச் செய்வதில் சிறப்பு புலனாய்வுக்குழு விருப்பமில்லாமல் இருந்ததாக சஞ்சீவ் பட் தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

“2009 நவம்பர் மாதம் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு நான் ஆதாரங்களை அளித்த பிறகு கடந்த மார்ச் மாதம் எனது வாக்குமூலத்தை பதிவு செய்யவேண்டும்.

இத்தருணத்தில் குஜராத்தின் ஒரு உயர் அதிகாரி புலனாய்வுக் குழுவிடம் என்ன கூறவேண்டும்? என்ன கூறக்கூடாதது? என்பதுக் குறித்து எனக்கு உத்தரவிட முயன்றார்.”

இது தொடர்பான ஆதாரங்களை பட் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இத்துடன் 2002 பிப்ரவரி 26, 27 ஆகிய தேதிகளில் கோத்ரா நகரத்தில் உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் குறித்த ஆவணங்களை  நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

2009 நவம்பர் மாதம் சிறப்பு புலனாய்வுக்குழு தன்னை முதன்முறையாக தொடர்புக் கொண்டதாக சஞ்சீவ் பட் கூறுகிறார். “ஒரு குறிப்பிட்ட தினத்தில் டி.ஐ.ஜி மல்கோத்ராவை சந்திக்க வேண்டுமென தொலைபேசி மூலம் எனக்கு உத்தரவு கிடைத்தது.

அடுத்த நாளே ஒரு அரசு அதிகாரி என்னை சந்திக்க வந்தார். சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் என்ன கூறவேண்டும் என்பதுக் குறித்து அவர் என்னிடம் தெரிவித்தார். 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் அவரும் கலந்துக்கொண்டார்.

எனக்கும், சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கும் மட்டுமே தெரிந்த செய்தி (சிறப்பு புலனாய்வுக்குழு சஞ்சீவ் பட்டை விசாரணைக்கு அழைத்த செய்தி) எவ்வாறு அரசுக்கு தெரியவந்தது என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என சஞ்சீவ் பட் கூறுகிறார்.

மாநில புலனாய்வுத் துறையில் துணை புலனாய்வு அதிகாரியான கெ.டி.பந்தை 2011 ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு அழைத்தது. சிறப்பு புலனாய்வுக்குழு உத்தரவுக்கிணங்க வாக்குமூலம் அளிக்கவேண்டுமென அவர்கள் அவரை கட்டாயப்படுத்தினர்.

இல்லையெனில், வழக்கில் கைது செய்யப்போவதாக மிரட்டினர். வாக்குமூலம் அளிக்க தயார் என தெரிவித்து மார்ச் 18-ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு தலைவர் ஆர்.கே.ராகவனுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்.” என பட் கூறுகிறார்.

ஆனால், சி.ஆர்.பி.சி 164 இன் படி வாக்குமூலத்தை பதிவுச் செய்யுமாறு நான் கோரிக்கை விடுத்தேன். ஏற்கனவே சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சார்ந்த மல்கோத்ராவுக்கும், பரம்வீர்சிங்கிற்கும் அளித்த வாக்குமூலத்தின் விபரங்கள் அப்படியே அரசுக்கு அளிக்கப்பட்டிருந்தது.

பல தடவை நான் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருக்கும் வேளையில் நான் பல காரியங்களைக் குறித்து கூறும்பொழுது சிறப்பு புலனாய்வுக் குழுவினர் என்ன உற்சாகம் இழக்கச்செய்ய முயன்றனர். மேகாணிநகர் கொலை வழக்கைக் குறித்து மட்டும் கூறினால்போதும் எனவும், இதர காரியங்களைக் குறித்து கூறத் தேவையில்லை என அவர்கள் உத்தரவிட்டனர்.

இனப் படுகொலையில் உயர் மட்ட சதித்திட்டம் குறித்துதானே சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்துகிறது? என நான் கேள்வி எழுப்பியபொழுது எனது வாக்குமூலத்தை முழுமையாக பதிவுச்செய்ய அவர்கள் தயாராகினர்.” என சஞ்சீவ் பட் கூறுகிறார்.

குஜராத் இனப் படுகொலையில் மோடியின் நேரடி பங்கைக் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சமர்ப்பித்துள்ள பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் முதல்வர் நரேந்திர மோடியை விசாரிக்கவேண்டும் என சி.பி.எம் பொலிட் பீரோ வலியுறுத்தியுள்ளது.

இனப் படுகொலையில் மோடியின் பங்கு பிரமாணபத்திரத்தின் மூலம் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் மோடிக்கு எதிரான விசாரணையை பூர்த்திச் செய்யவும், அவரிடம் விசாரணை நடத்தவும் தாமதப்படுத்தக் கூடாது என பொலிட் பீரோ கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக