செவ்வாய், ஏப்ரல் 26, 2011

குவாண்டனாமோ சிறையில் நிரபராதிகள்: விக்கிலீக்ஸ்


குவாண்டனாமோ சிறையில் ஒரு கைதி

குவாண்டனாமோ பே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பங்கினர் ஒன்று நிரபராதிகள் என்றோ அல்லது வெறுமனே கீழ் மட்டத்தில் செயல்பட்டவர்கள் என்றோதான் அமெரிக்க அதிகாரிகள் நம்பியிருந்தனர் என்று விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ள ஆவணங்கள் காட்டியுள்ளன.
டெய்லி டெலிகிராஃப், வாஷிங்டன் போஸ்ட் போன்ற நாளிதழ்களில் தற்போது வெளிவந்துள்ள ஆவணங்கள், குவாண்டனாமோ பே சிறையில் பல்வேறு காலகட்டங்களிலுமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த எழுநூற்று எண்பது பேர் பற்றி ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட மதிப்பீடுகள் பற்றி தகவல் தருகின்றன.
முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் சுமார் நூற்று ஐம்பது பேர், நிரபராதிகளாக கருதப்படக்கூடிய ஆப்கானியர்கள் மற்றும் பாகிஸ்தானியர் என்று ஆய்வுகள் மூலம் செய்யப்பட்ட மதிப்பீடுகளில் வருணிக்கப்பட்டுள்ளனர்.

இதில் வேறு 380 பேரும்கூட கீழ் மட்டத்தில் செயல்படுபவர்கள் என்றேதான் அமெரிக்க அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளால் மதிப்பிடப்பட்டுள்ளனர்.
மொத்தம் 780 பேரில் வெறும் 220 பேர்தான் ஆபத்து மிக்க பயங்கரவாதிகளாக இந்த மதிப்பீடுகளில் கருதப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு ஒருவர் என்று தவறுதலாகக் கருதப்பட்டதால் கைது செய்யப்பட்டு வருடக் கணக்கில் குவாண்டனாமோ பேயில் அடைபட்டிருந்தவர்களும் இருக்கிறார்கள் என்று அமெரிக்க அரசாங்கக் குறிப்புகள் காட்டுகின்றன.
குபாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளமான குவாண்டனாமோ பேயில் தற்சமயம் உள்ள இந்த தடுப்புக் காவல் மையத்தில் நூற்று எண்பதுக்கும் சற்றுக் கூடுதலானவகள் மட்டுமே அடைபட்டுள்ளனர்.
போதிய கண்காணிப்பு இன்றி விடுவிக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு ஆபத்து விளைவிப்பார்கள் என்று கருதப்படக்கூடியவர்கள் அவர்கள் என்று கருதப்படுகிறது.
பயங்கரவாதத் தாக்குதல் சதித் திட்டங்கள்
தவிர அதிர்ச்சி தரும் வகையிலான பயங்கரவாத சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தமை குறித்தும் அமெரிக்க அரசாங்கம் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்திருந்தது.
ஒசாமா பின் லேடன் பிடிபடும் பட்சத்தில் தாங்கள் மறைத்துவைத்துள்ள அணு ஆயுதத்தை ஐரோப்பாவில் வெடிப்பது என்ற ஒரு திட்டமும், அமெரிக்காவின் பொதுக் கட்டிடங்களின் குளிரூட்டும் கருவிகளில் சைனைட் என்ற கொடிய விஷத்தை கலப்பது என்ற ஒரு திட்டமும், லண்டனின் ஹீத்ரு விமான நிலைய ஊழியர்களை தமது ஆளணியில் சேர்க்க அல்கைதாவினர் முயற்சி மேற்கொள்ளவது என்ற திட்டமும் தீட்டப்பட்டிருந்ததாக கசிந்துள்ள ஆவணங்கள் தகவல் தருகின்றன.
இந்த ரகசியத் தகவல்கள் வெளியில் கசிந்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றும், இந்தக் கூற்றுக்கள் எல்லாம் அந்தந்த காலகட்டத்துக்குரிய விஷயங்கள் என்றும், தற்போதைக்கு இவையெல்லாம் காலாவதியாகிப் போய்விட்டுள்ளன என்றும் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகான் வருணித்துள்ளது. 
BBC

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக