புதன், ஏப்ரல் 13, 2011

முபாரக், மகன்கள் கைது - எகிப்தில் இராணுவம் அதிரடி!


மக்கள் புரட்சியால் அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட எகிப்தின் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவருடைய இரு மகன்களையும் தடுப்புக்காவலில் வைத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளதாக இராணுவ அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக எகிப்து இராணுவ குற்றப்பிரிவினர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவருடைய மகன்கள் காமல், ஆலா ஆகிய இருவரையும் 15 நாட்களுக்கு, குற்றப்பிரிவினர் விசாரணை நடத்துவர். குற்றப்பிரிவின் ஜெனரலும் இந்த விசாரணையில் கலந்துகொள்கிறார்.
பொதுமக்களின் பணத்தைத் தவறாக பயன்படுத்தியமை, லஞ்ச ஊழல் மோசடி செய்தமை, மக்கள் புரட்சியை ஒடுக்க சுமார் 800க்கு மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றது போன்ற விஷயங்கள் தொடர்பில் இவ்விசாரணைகள் நடத்தப்படுகின்றன." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பிரிவின் இந்த அறிவிப்பு வெளியான நிமிடங்களிலேயே, முபாரக்கின் இரு மகன்களான காமல் மற்றும் ஆலா ஆகியோர் காவல்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களைக் கைது செய்யும்போது அங்கியிருந்த அவர்களின் ஆதரவாளர்கள், காவல்துறை வாகனத்தின் மீது தண்ணீர் குப்பிகள், கற்கள் போன்றவற்றை வீசி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதற்கிடையில், எகிப்து மக்கள் புரட்சியை ஒடுக்குவதற்காக, முபாரக்கின் கட்டளைக்கு ஏற்ப, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 800 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யபப்ட்டது தொடர்பான நடைபெற்றுக்கொண்டிருக்கையில் முபாரக்கிற்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக