விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’குஜராத்தில் ’’இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் வெடித்துள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. படேல் சமூகத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டுமென்று கோரி லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.
அன்று இடஒதுக்கீடே கூடாது என வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டுமென்று வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கு என்ன பின்னணி என்பதுதான் கேள்விக்குரியதாக உள்ளது.
படேல் சமூகத்தினர் பெரும்பான்மையாக விவசாயம், பால் வியாபாரம், வைர வியாபாரம் மற்றும் ஆடை உற்பத்தி போன்ற தொழில்களை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்கள் இந்திய அளவில் பொருளாதாரத்தில் மிகவும் வலிமைமிக்க முற்பட்ட வகுப்பினர் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவது சமூக நீதிக்கெதிரான அவர்களின் தீய உள்நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது.
‘எங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குங்கள்; இல்லையேல் இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கைவிடுங்கள்’ என்று தங்களின் உண்மை நோக்கத்தைத் தயக்கமின்றி வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவது இடஒதுக்கீட்டுக் கொள்கையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இடஒதுக்கீட்டிற்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள் இன்று மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இத்தகைய போராட்டங்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுவதையும் காண முடிகிறது. இடஒதுக்கீட்டு முறையைப் பாதுகாப்பதற்கு சமூக நீதிச் சிந்தனையாளர்கள் ஒருங்கிணைந்து போராட முன் வர வேண்டும்.
இடஒதுக்கீட்டுக் கொள்கையை தலித் மற்றும் பழங்குடியினருக்கான பிரச்சனையாக மட்டும் கருதாமல், சமூகநீதிக் கோட்பாட்டையே அழித்தொழிக்கத் துடிக்கும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை அம்பலப்படுத்துவதும், அவர்களுக்கெதிரான அறப்போராட்டத்தில் ஈடுபடுவதும், அதற்கென அகில இந்திய அளவில் அணிதிரள வேண்டியதும் இன்றைய வரலாற்றுத் தேவை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது’’என்று கூறி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக