திங்கள், ஆகஸ்ட் 03, 2015

ரீ யூனியன் தீவில் உலோக சிதைவு கண்டெடுப்பு: மாயமான மலேசிய விமானத்துக்கு உரியதா என ஆய்வு?

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 (போயிங் 777 ரகம்), கடந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகர் பீஜிங்கிற்கு சென்றபோது நடுவானில் மாயமானது. இந்த விமானம் காணாமல் போய் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு ஆகியும் அதன் கதி என்ன ஆனது என்பது உறுதிபட தெரியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் அந்த விமானத்தின் உதிரிபாகம் என கருதப்படுகிற சிதைவு ஒன்று கடந்த மாதம் 29-ந் தேதி பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான ரீயூனியன் தீவு கடற்கரையில் ஒதுங்கியது. அதை எடுத்துச் சென்று பாரீசில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், அந்த சிதைவு மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்துக்கு உரியதுதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மலேசிய போக்குவரத்து துறை மந்திரி லியோ பயாங் லாய் நேற்று கூறுகையில், “ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைவு, மாயமான விமானத்தின் பாகம்தான் என்பதை பிரான்ஸ் அதிகாரிகளும், போயிங் விமான நிறுவனத்தின் அதிகாரிகளும், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகளும், மலேசிய வல்லுனர் குழுவினரும் கூட்டாக ஆராய்ந்து உறுதி செய்துள்ளனர்” என்றார்.

இந்த நிலையில், அந்த தீவின் கடற்கரையில் புதிதாக உலோக சிதைவு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மாயமான மலேசிய விமானத்துக்கு உரியதுதானா என்பது தெரியவில்லை. அது குறித்து ஆராயப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக