திங்கள், ஆகஸ்ட் 31, 2015

கர்நாடகாவின் மூத்த எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொலை: பதட்டம்

ஹம்பியில் உள்ள கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புரட்சிகர எழுத்தாளருமான எம்.எம் கல்புர்கி நேற்று  காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கல்யாண் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று காலை 2 மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் வந்துள்ளனர். அதில் ஒருவன் வெளியிலேயே நிற்க இன்னொருவன் அவரது வீட்டின் கதவைத் தட்டியுள்ளான். தெரிந்தவர்கள் யாரோ வந்திருப்பதாக நினைத்து கதவைத் திறந்த அவரை, சுட்டுக் கொன்று விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்துக் கடவுள்கள் மற்றும் உருவ வழிபாடுகளுக்கு எதிரான பல கருத்துக்களை இவர் நீண்ட காலமாக பேசியும் எழுதியும் வந்தார். இதனால், இந்து அடிப்படை வாதிகளின் தனிப்பட்ட எதிரியாக மாறியிருந்தார். எனவே, இந்தக் கொலையின் பின்னணியில் இந்து அடிப்படைவாதிகள் இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். அண்மையில், அவரது வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் அமைப்பினர் அவரது வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

2006-ம் ஆண்டு ‘மார்கா 4’ என்ற இவரது 100 ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்புக்காக, இவருக்கு தேசிய சாகித்ய அகாடமி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடகாவின் மிகச்சிறந்த கல்வெட்டு எழுத்தாளரும் ஆவார். இவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு சமூக ஆர்வலர்களும் முற்போக்கு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக