திங்கள், ஆகஸ்ட் 03, 2015

கலிங்கப்பட்டியில் காவல்துறையின் அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

’’மதுஒழிப்பிற்கு எதிரான காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் உயிர் தியாகத்துக்கு பிறகு இன்றைக்கு மதுவிலக்கு கோரியும், மதுக்கடைகளை மூடக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்காமல் அரசு காவல்துறை மூலம் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை இன்றைக்கு காவல்துறை வன்முறைக் களமாக மாற்றியுள்ளது. முக்கிய அரசியல் கட்சித் தலைவர் பங்குபெறும் போராட்டம் என்பதைக் கூட காவல்துறை கண்டுகொள்ளாமல், தடியடி, கண்ணீர் புகைக்குண்டு என மோசமான தாக்குதலை கையாண்ட விதம் கண்டனத்திற்குரியது. போராட்டத்தின் போது காவல்துறையின் அடக்குமுறையால் வெகுண்டெழுந்த மக்கள் மதுக்கடையை சூறையாடியுள்ளனர். இதையடுத்து அவர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை குறிவைத்து கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மதுப்பழக்கத்தால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அனாதைகளாகி கொண்டு இருக்கின்றன. சமூக தீமைகள், குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய தீய பழக்கத்திற்கு பள்ளி  மாணவர்களும் ஆட்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட மதுவை, அரசே விற்பனை செய்து வருவதால், குறைந்தபட்ச விதிமுறையை கூட அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.

 பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலும், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும், பொதுமக்களுக்கு இடையூறாக ஆயிரத்துக்கும் மேலான டாஸ்மாக் கடைகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினாலும் அதிகாரிகள் அதை கண்டுகொள்வதில்லை. அரசு நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியத்திற்கு எதிராக மக்கள் வெகுண்டெழ ஆரம்பித்துள்ளார்கள். அதன் தொடர்ச்சிதான் இன்றைக்கு நடந்தேறியுள்ளது.

தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த அதிமுக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. அரசியல் கட்சிகளின் பொதுக்கருத்தாக மாறியுள்ள மதுவிலக்கு கோரிக்கையை பொதுமக்களும் வரவேற்றுள்ளனர். ஆனால்,  தமிழக அரசோ அதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே இருந்து வருகிறது. ஆகவே, சசி பெருமாளின் இழப்பு, கலிப்பட்டி சம்பவம் இவற்றை கருத்தில் கொண்டு உடனடியாக மதுவிலக்கு கொள்கையினை நடைமுறைப்படுத்தும் வகையில், படிப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டு, இதுபோன்ற உயிர் பலிகள், வன்முறை போராட்டங்கள் தொடராமல் தடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையின் அடைப்படையில் நடைபெற்ற, வன்முறை சம்பவத்திற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்பதால், அந்த கிராம மக்கள் மீதோ, வைகோ அவர்கள் மீதோ காவல்துறை வழக்கினை பதிவு செய்யாது, சுமூகமான முறையில் அந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் வன்முறை போராட்டத்தினை எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. ஆனால் அரசு நிர்வாகமும், காவல்துறையும் மக்களின் நியாயமான, கோரிக்கைகளை அலட்சியமாக கருதி, அடக்குமுறை மூலம் அதனை கையாண்டு, மக்களின் கோபத்தை தூண்டுவதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆகவே தமிழக அரசும், காவல்துறையும் மக்களின் உணர்வுப்பூர்வமான மதுவிலக்கு கோரிக்கையினை செவிமடுத்து அதனை செயல்படுத்த முன்வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக