செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

ம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்திரி தொடர்பு அம்பலம்

மத்திய பிரதேச மாநிலத்தில் தொழில் கல்வி மற்றும் அரசுப் பணி தேர்வு வாரியத்தில் பல ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. இதுபற்றி மாநில போலீசாரின் சிறப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. அப்போது கடைநிலை ஊழியரில் தொடங்கி கவர்னர் வரை இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மாநில போலீசார் இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியதால் குற்றவாளிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்தனர். சில குற்றவாளிகள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அரசு தேர்வு வாரிய முறைகேடு பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பலர் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். அதை ஏற்று இந்த முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் 50–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அரசு தேர்வு வாரிய முறை கேட்டில் (வியாபம்) மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. முதல்–மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர் குடும்பத்தினரும் இந்த ஊழலில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டை முதல்–மந்திரி சிவ்ராஜ் சவுகான் மறுத்து வந்தார்.

இந்த நிலையில் முதல்– மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் மீது ஆதாரப்பூர்வமான வியாபம் ஊழல் குற்றச்சாட்டு ஒன்று பரபரப்பாக வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள மதன்லால் சதுர்வேதி தேசிய பல்கலைக்கழக சிலரை பணி நியமனத்துக்கு அவர் பரிந்துரை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பல்கலைக்கழகத்தில் சில தனி நபர்களை மூத்த பேராசிரியர்களாக பணி நியமனம் செய்யும்படி முதல்–மந்திரி சவுகான் தன் கைப்பட கடிதம் எழுதி கொடுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்புத் துறை செயலாளர் மூலம் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கடிதம் கொடுத்து இந்த பணி நியமனத்தை முதல்–மந்திரி சவுகான் செய்திருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

சவுகான் இதற்காக தன் கைப்பட எழுதிய கடிதத்தை தகவல் கேட்பு உரிமை சட்டத்தை பயன்படுத்தி சிலர் பெற்றுள்ளனர்.

கடந்த 2010–ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்–மந்திரி சவுகான் பரிந்துரை செய்து கடிதம் கொடுத்த ஒரே நாளில் அன்றைய தினமே துணை வேந்தர் அந்த நபர்களுக்கு பதவியில் நியமித்து உத்தர விட்டுள்ளார்.

இந்த தகவல்களை ஆர்.டி.ஐ.யை பயன்படுத்தி சமூக ஆர்வலர் புர்னேந்து சுக்லா என்பவர் கண்டுபிடித்து வெளியில் கொண்டு வந்துள்ளார். மூத்த பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதில் முதல்– மந்திரிக்கு கணிசமான தொகை கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வியாபம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் நிலையில் முதல்–மந்திரி மீதான புதிய குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே மத்திய பிரதேச மாநில கவர்னர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் ஆசிரியர் பணிக்கு 10 பேரை முறைகேடான முறையில் பரிந்துரை செய்தது அம்பலானது. இதுபற்றி விசாரணை தொடங்கிய போது கடந்த மார்ச் மாதம் சைலேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

சைலேஷ் எப்படி மரணம் அடைந்தார் என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை என்று மாநில போலீசார் கூறியிருந்தனர். இதுபற்றி சி.பி.ஐ. நேற்று முதல் கட்ட விசாரணையை தொடங்கியது.

சைலேஷ் எப்படி மரணம் அடைந்தார் என்பதை கண்டுபிடித்து விட்டால், வியாபம் முறைகேட்டின் ஆணிவேரை பிடித்து விடலாம் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள். அவர்களது விசாரணை மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக