திங்கள், ஜனவரி 23, 2012

முஸ்லிம் இளைஞர் கைது:மஹராஷ்ட்ரா அரசுக்கு சிறுபான்மை கமிஷன் கடிதம் !

புதுடெல்லி/மும்பை:டெல்லியில் வசித்துவந்த முஸ்லிம் இளைஞரை கைது செய்தது குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய சிறுபான்மை கமிஷன் மஹராஷ்ட்ரா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவுக்கு தகவல் அளிக்கும் நகீ அஹ்மத் என்பவரை போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகளை வாங்கினார் என குற்றம்சாட்டி மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.

இக்குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது என்றும், இப்பிரச்சனையில் தலையிடக் கோரியும் நகீ அஹ்மதின் சகோதரர் தகீ தேசிய சிறுபான்மை கமிஷனை அணுகினார்.
கடந்த ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்கு டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவிற்கு தகவல்களை கொடுத்து நகீ அஹ்மத் உதவியதாக அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
மஹராஷ்ட்ரா மாநிலத்தின் சிறுபான்மை கமிஷன் உறுப்பினர் கெ.என்.தாருவாலா இச்சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் அருண் பட்நாயக், மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா ஆகியோரை தொடர்பு கொண்ட போதிலும் பலன் ஏற்படவில்லை என தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மை கமிஷன் கைது சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு கடுமையாக கடிதம் ஒன்றை மஹராஷ்ட்ரா மாநில உள்துறை செயலாளர் யு.சி.சாரங்கிக்கு அனுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என கமிஷன் கோரியுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் நபர்களை கைது செய்ய மத்திய புலனாய்வு ஏஜன்சிகளும், டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவும் நகீயை பயன்படுத்தியுள்ளன. மும்பையைச் சார்ந்த நபர்களை அடையாளம் காண அங்கு தங்குவதற்கு புலனாய்வு ஏஜன்சிகள் நகீயிடம் கூறியுள்ளன.
டெல்லியில் உயர் புலனாய்வு அதிகாரியின் மேற்பார்வையில் நடக்கும் மிக ரகசியமான செயல்பட்டு வரும் வேளையில் மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் பணி புரிந்த இடத்தில் இருந்து நகீயை கைது செய்துள்ளது. இச்சம்பவம் டெல்லி போலீசிற்கும் ஏ.டி.எஸ்ஸிற்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
நகீயின் இரண்டு சகோதரர்களை ஏ.டி.எஸ் கைது செய்து பின்னர் விடுவித்துள்ளது. மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக நகீ அளித்த தகவல்கள் தங்களது விசாரணையை திசை திருப்பியதாக குற்றம் சாட்டி அவரை கைது செய்ததாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்களின் ரகசிய முயற்சியை சீர்குலைத்து விடாதீர்கள் என மத்திய புலனாய்வு ஏஜன்சிகளும், டெல்லி போலீசும் ஏ.டி.எஸ்ஸிடம் கோரிக்கை விடுத்தபோதிலும் அதனை பொருட்படுத்தாது நகீயின் இரண்டு இளைய சகோதரர்களை மும்பையில் வைத்தும், மூத்த சகோதரன் தகீயை டெல்லியில் வைத்தும் பிடித்துச்சென்று கஸ்டடியில் சித்திரவதைச் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நீதி தேடி பல கதவுகளை தட்டிவிட்டு இறுதியாக தகீ தேசிய சிறுபான்மை கமிஷனை
அணுகியுள்ளார்.
‘தீவிரவாதிகளை கைது செய்ய தேசத்திற்கு உதவியதற்காக ஒரு இந்தியக் குடிமகன் அளித்த விலை இதுதான் என்பது வருத்தத்திற்கு’ என உரியது தகீ கூறியுள்ளார்.
மத்திய மற்றும் மாநில புலனாய்வு ஏஜன்சிகள் முஸ்லிம் இளைஞர்களை கட்டாயப்படுத்தி சில வேளைகளில் மிரட்டியும் இன்ஃபார்மர்களாக(தகவல் அளிப்பவர்கள்) பயன்படுத்திவிட்டு பின்னர் தாங்கள் விரும்பிய தகவல்கள் கிடைக்கவில்லை எனில் இன்ஃபார்மர்களையே கைது செய்து குற்றவாளிகளாக அல்லது தீவிரவாதிகளாக முத்திரைக்குத்தும் சம்பவங்கள் எழுந்துள்ளது. இதற்கு நகீ அஹ்மதின் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக