திங்கள், ஜனவரி 23, 2012

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களிடம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை !

Supreme Courtடெல்லி: தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த செல்லமுத்து மற்றும் 14 உறுப்பினர்களின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினர். இதையடுத்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நெருக்குதலைத் தொடர்ந்து செல்லமுத்து பதவி விலகினார். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களான லட்சுமணன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இந்த விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தங்களை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரிக்க தடை கோரி அதில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த விசாரணைக்கு வகை செய்யும் வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

மனுதாரர்களின் மனு குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக