மதுரையைச் சேர்ந்தவர் காசிநாதன். இவர், கடந்த 2007ஆம் ஆண்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.பி.ஏ படித்தார். இறுதித் தேர்வில் 48.44 சதவீத மதிப்பெண் பெற்றார். அதன்பின் நத்தத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சுயநிதி பிரிவில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.ஏ படிப்பில் சேர்ந்தார். முதலாம் ஆண்டு 77 சதவீத
மதிப்பெண் பெற்றார்.
இந்த நிலையில் 2ஆம் ஆண்டுக்கு கல்விக்கடன் கேட்டு மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தார். பட்டப்படிப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் கல்விக்கடன் அளிக்க முடியாது என்று வங்கி நிர்வாகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதனால் தனக்கு கல்விக்கடன் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று காசிநாதன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி தீர்ப்பில் கூறி இருப்பதாவது:
திறமை உள்ள ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி மறுக்கப்படக்கூடாது என்பதற்காகவே கல்விக்கடன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகள் அசோசியேசன் கல்விக்கடன் வழங்குவதற்காக சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. அதன்படி நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கீழ்நிலை படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு பெறாதவர்கள் கல்விக்கடன் பெற முடியாது.
நிர்வாக ஒதுக்கீட்டில் எத்தனை மதிப்பெண் பெற்ற மாணவரையும் சேர்க்கலாம் என்பதால் இதுபோன்ற வழிகாட்டுதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தகுதி இல்லாத மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட முடியாது. அடிப்படை கல்விக்கு வேண்டுமானால் கடன் வழங்கும் விதிகளை தளர்த்தலாம். உயர்கல்வி என்று வரும்போது தகுதி, திறமை ஆகியவை முக்கியம். வேலைக்கு செல்லும் அளவுக்கு தகுதி உள்ளது என்ற அடிப்படையில் கடன் அளிக்கும் போது தான், அந்த பணத்தை வங்கி நிர்வாகம் திரும்ப பெற முடியும்.
தகுதி இல்லாத மாணவர்களுக்கு கடன் கொடுக்கும் போது, அந்த கடன் வராக்கடனாகி விடும். இதனால் வங்கிக்கு நஷ்டம் ஏற்படும். பெற்றோருக்கு கஷ்டம் ஏற்படும். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக