புதன், ஆகஸ்ட் 06, 2014

சீனாவில் மீண்டும் வெள்ள அபாயம்: நிலநடுக்கப் பலி 600-ஐ நெருங்கியது

சீனாவில் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள சாவோடாங் நகரில் லூதியன் பகுதியில் கடந்த 3-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. 
இந்த நிலநடுக்கத்தில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து அழிந்தன. 30 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. இதனால் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு லூதியன் பகுதியை சேர்ந்த பொது மக்களும் உதவி செய்தனர்

இன்று அதிகாலை நிலவரப்படி, 589 பிரேதங்கள் மீட்கப்பட்டதாகவும், காயங்களுடன் 2,400 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனதாக கருதப்படும் 9 நபர்களை மீட்புப் படையினர் தேடி வருவதாகவும் சீனாவின் பொது விவகாரங்கள் துறை மந்திரி அறிவித்துள்ளார். 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீர்குலைந்துப் போய் இருக்கும் சாலைகள் மற்றும் பாலங்களை செப்பனிடும் பணிகளில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழையால் இப்பணிகளில் சுணக்கம் காணப்படுகிறது. 

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்கள் மலைப்பாங்கான பகுதி என்பதால், மலையில் இருந்து உருண்டு சரிந்த பெரும் பாறைகள், அவ்வழியே பாயும் நியுலன் ஆற்றுக்குள் விழுந்து குவியலாக கிடக்கின்றன. 

இதனால், ஆற்றின் வழியாக பாய வேண்டிய மழை நீர் தடைபட்டு, சுற்றுப்புறங்களில் புதிய ஏரியாக உருவாகியுள்ளது. இந்த தற்காலிக ஏரிகளின் நீர்மட்டம் ஒரு மணி நேரத்துக்கு 16 சென்டிமீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்து வருகின்றது. 

இன்னும் சில மணி நேரங்களில் அப்பகுதியில் உள்ள் வீடுகளை வெள்ளம் சூழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் சுமார் 4,200 மக்களை உள்ளூர் நிர்வாகம் வெளியேற்றியுள்ளது. இதைப்போன்ற மற்றொரு தற்காலிக ஏரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் நேற்று சிக்கிக் கொண்ட சுமார் 60 ராணுவ வீரர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக