சனி, ஆகஸ்ட் 02, 2014

கும்பக்கோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது! – எஸ்.டி.பி.ஐ

கும்பக்கோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என  எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் 94 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்தனர். இவ்வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு பொது மக்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெரிதும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 21 பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் ஆசிரியர்கள், மற்றவர்கள் உயர் அதிகாரிகளாவர். தண்டனை பெற்ற 10 பேரில் பள்ளியின் நிறுவனர், அவர் மனைவி, சத்துணவு அமைப்பாளர், 3 பள்ளி ஆசிரியர்கள்  மற்றவர்கள்  சாதாரண ஊழியர்களே ஆவர். சாதாரண ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட நிலையில், பள்ளியை பார்வையிடாமல், உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பள்ளிக்கு அனுமதி அளித்த உயர் அதிகாரிகள், நகராட்சி ஆணையர் ஆகியோர் போலீஸ் மற்றும் அதிகார வர்க்கங்களால் தப்ப வைக்கப் பட்டுள்ளனரோ என்ற சந்தேகம் நிலவுகிறது.
பொதுவாகவே இதுபோன்ற வழக்குகளில் தவறிழைத்த உயர் அதிகாரிகள் தண்டனையிலிருந்து தப்பவைக்கப்படுவது நீதித்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைக்கிறது. தவறிழைத்தவர்கள் தண்டனை பெறும்போதே மீண்டும் இதுபோன்ற கொடூரங்கள் நடப்பதை தடுக்க முடியும்.

மேலும் இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 10 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு தாமதித்து அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பு பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய நீதியை மறுத்துள்ளது. ஆகவே இவ்வழக்கில் தவறிழைத்த உயர் அதிகாரிகளை நீதியின் பிடியிலிருந்து தப்பவிடாமல் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் உரிய அனுமதி பெறாமல், குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் முறைகேடான வழியில் அங்கீகாரம் இன்றி இன்னும் செயல்பட்டு வருகின்றன என்பதை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக அரசின் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன். ஆகவே தமிழக அரசு வருங்காலங்களில் இதுபோன்ற கொடூரங்களை தடுக்கும் விதமாக உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளையும், முறையான குழுக்களையும், ஆணையங்களையும் அமைக்க வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக