புதன், ஆகஸ்ட் 06, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் டீ சர்ட் விவகாரம்! இராமநாதபுரத்தில் இளைஞர்கள் கைது! கண்டிக்கத்தக்கது : எஸ்.டி.பி.ஐ



இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கடந்த ஈகை பெருநாள் தினத்தன்று இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சில இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று அச்சிடப்பட்ட டீ-சர்ட்டுகளை அணிந்து புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்த புகைப்படமானது சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டு அதுதொடர்பாக சில இளைஞர்கள் உளவு மற்றும் காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது தற்போது ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய பொம்மை அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகள் என கூறப்படுகிறது. எனினும் அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சமீபத்தில் அவர்கள் கைப்பற்றிய பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த இந்தியாவை சேர்ந்த செவிலியர்களை பத்திரமாக தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதுமுதல் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பற்றிய செய்திகள் பிரபலமடைந்தன.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பின்புலம் பற்றி இதுவரை அறியப்படாத நிலையில் அவர்களின் சமீபத்திய பிரபலத்தை வைத்து தொண்டியை சேர்ந்த சில இளைஞர்கள் அந்த அமைப்பின் பெயர் பதிந்த டீ-சர்ட் அணிந்து புகைப்படம் எடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளனர். அமைப்பின் பின்புலம் பற்றி தெரியாமல் அவர்கள் இவ்வாறு செய்தது தவறு, அங்கீகரிக்க கூடிய செயல் அல்ல. இருப்பினும் அவர்கள் எந்த உள்நோக்கமும் இன்றி, வெறும் வேடிக்கைக்காக உற்சாக மிகுதியில் அவ்வாறு அவர்கள் செய்துள்ளனர். இதனை முதலில் அவர்களை அழைத்து விசாரித்த காவல்துறை அதிகாரியே தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையெனில் அவர்கள் அந்த புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்க மாட்டார்கள்.
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் இந்தியா உட்பட உலகில் எங்கும் தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல. ஆகவே தடை செய்யப்படாத ஒரு அமைப்பின் பெயரை பதிந்த ஆடைகளை அணிவது எந்த வகையிலும் குற்றமாகாது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல அமைப்புகளின் தலைவர்களின் படங்கள், கொடிகள் போன்றவற்றை பலரும் பயன்படுத்தும் நிலையில், தடை செய்யப்படாத ஒரு அமைப்பின் பெயர் பதிந்த ஆடையை, எந்த உள்நோக்கமும் இன்றி வேடிக்கைக்காக உற்சாக மிகுதியில் அணிந்த இளைஞர்களை, முஸ்லிம்கள் என்பதற்காக அவர்களை பெரும் தீவிரவாதிகள் போன்று, சித்தரித்து கைது செய்து விசாரணை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக முதலில் அவர்கள் அழைக்கப்பட்டு காவல்துறையால் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை வரவேற்கத்தக்கது. ஆனால் மீண்டும் அவர்கள் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணை செய்திருப்பது என்பது கண்டனத்திற்குரியது. ஆகவே தமிழக அரசு உடனடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக