எகிப்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து இறக்கி அதிபர் பதவியைக் கைப்பற்றிய முகம்மது மோர்சி அங்கு ஏற்பட்ட எதிர்ப்புகளால் பதவி இறக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது ஆதரவாளர்களும், இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தினரும் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி அங்கு நடைபெற்ற ஒரு போராட்டத்தில் பாதுகாப்புத் துறையினரால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். எகிப்தின் தற்போதைய அதிபராக விளங்கும் அப்துல் பட்டா அல் சிசியே அப்போதைய ராணுவத் தலைவராக இருந்தார். ராணுவத்தினரின் இந்த வன்முறைகளை எதிர்த்த உரிமைக் குழுக்களில் மனித உரிமைக் கண்காணிப்பு குழுவும் ஒன்றாகும்.
மோர்சியைப் பதவியிலிருந்து இறக்கியபின்னர் எகிப்தின் ராணுவத்தினரும், காவல்துறையினரும் திட்டமிட்டபடி ஆயுதங்களால் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியது குறித்து தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிடுவதற்காக சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் கென்னெத் ரோத்தும், மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் மனித உரிமைக் கழகத்தின் தலைவியான சாரா லெ விட்சனும் ஞாயிறன்று இரவு கெய்ரோ விமான நிலையத்தில் வந்து இறங்கினர். ஆனால் அவர்களை 12 மணி நேரத்திற்கும் மேல் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைத்திருந்த அரசு பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களை இன்று திருப்பி அனுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக