திங்கள், ஆகஸ்ட் 04, 2014

யு.பி.எஸ்.சி: டெல்லியில் ராஜ்நாத் சிங் வீடு முற்றுகை!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தேர்வு எழுதுபவர்கள், இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் (என்எஸ்யுஐ) உள்ளிட்டோர் தில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தை சனிக்கிழமை காலையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
யுபிஎஸ்சி நடத்தும் "குரூப் 1' முதல்நிலைத் தேர்வில் இடம் பெற்றுள்ள திறனாய்வுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்எஸ்யுஐ பொதுச் செயலர் மொஹித் சர்மா தலைமையில் நூற்றுக்கணக்கானோர் அசோகா சாலையில் உள்ள ராஜ்நாத் சிங் இல்லம் முன்பு சனிக்கிழமை காலை 9 மணிக்குத் திரண்டனர். அதைப் பார்த்த போலீஸார் அந்தப் பகுதியில் கூட்டமாக நிற்கக் கூடாது என்றும், கலைந்து போக வேண்டும் என்றும் எச்சரித்தனர்.
அதைப் பொருள்படுத்தாமல் "யுபிஎஸ்சி திறனாய்வுத் தேர்வு முறையை மாற்ற வேண்டும். கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். அப்பாவிகள் மீது வழக்குப் போடக் கூடாது' என்று அவர்கள் கோஷமிட்டனர். அவர்களுடன் சேர்ந்து யுபிஎஸ்சி தேர்வு எழுதும் ஆர்வலர்கள் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந் நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் வீடு முன்பாக போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போடப்பட்டிருந்த தடுப்புகள் மீது சிலர் ஏறிச் செல்ல முற்பட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் மீது போலீஸார் லேசாக பலப்பிரயோகம் நடத்தினர். அதையும் மீறி அந்தப் பகுதியில் நின்றிருந்தவர்களை போலீஸார் கட்டாயப்படுத்தி போலீஸ் பேருந்தில் ஏற்றி நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் மொஹித் சர்மா கூறியது: "யுபிஎஸ்சி "குரூப் 1' முதல்நிலைத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது. அதில் இரண்டாம் பகுதியில் இடம் பெற்றுள்ள தேர்வு வினாக்கள், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் மட்டும் தேர்ச்சி பெறும் வகையில் உள்ளது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக இத் தேர்வில் பங்கேற்பவர்களில், மாநில மொழிக் கல்வி கற்றவர்களின் தேர்ச்சி விகிதம்
குறைந்து வருகிறது. ஆகவே, மிகவும் தீவிரமான இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தேர்வெழுதும் ஆர்வலர்கள் கடந்த 25-ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று அறிவித்த மத்திய அரசும், இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், யுபிஎஸ்சி "குரூப் 1' தேர்வு ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதை அரசு தள்ளிவைக்குமா அல்லது தேர்வு முறையில் மாற்றம் செய்யுமா போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. எனவேதான் ஆர்வலர்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். மத்திய அரசு வரும் திங்கள்கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்' என்றார் மொஹித் சர்மா. இதனிடையே, யுபிஎஸ்சி ஆர்வலர்கள் போராட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக