சனி, ஆகஸ்ட் 30, 2014

நெல்லை மேயர் தேர்தலில் பிரபல அரசியல் கட்சிகள் 5 அணியாக போட்டி ?

நெல்லை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்ந்தெடுக்க வருகிற 18–ந்தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பாக நெல்லை மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளதால், இவரை எதிர்த்து தி.மு.க. போட்டியிடாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பி.ஜே.பி., பா.ம.க. மற்றும் ஐ.ஜே.கே. போன்ற கட்சிகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது போல போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.

வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால் அதற்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் கட்சி தலைமைக்கு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அநேகமாக வருகிற 1–ந்தேதி இதுகுறித்து கூட்டணி கட்சிகள் பேசி முடிவுகளை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு கூட்டணி அமைத்தால் நெல்லை மேயர் வேட்பாளராக ம.தி.மு.க. அல்லது பி.ஜே.பி. கட்சி சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

இதேபோல் நெல்லை மேயர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் விலகி தனியாக போட்டியிட்டது. அதுபோல இந்த முறையும் நெல்லை மேயர் தேர்தலில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து மேயர் வேட்பாளரை நிறுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் தனியாக போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியும் நெல்லை மாநகர மேயர் தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளது. தி.மு.க. போட்டியிடாததால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவை கேட்டு பெறுவதிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதனால் நெல்லை மேயர் தேர்தலில் பிரபல அரசியல் கட்சிகள் 5 அணியாக போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் வருகிற 4–ந்தேதியே முடிவடைய உள்ளதாலும், தேர்தலுக்கு மொத்தம் 18 நாட்களே உள்ளதாலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இப்போதே முக்கிய பிரமுகர்களுடன் பேசி காய் நகர்த்த தொடங்கி உள்ளனர். இதனால் நெல்லை மேயர் தேர்தல் களை கட்ட தொடங்கி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக