வெள்ளி, ஆகஸ்ட் 08, 2014

சாதிப்பிரிவினையை ஊக்குவிக்கும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தை திரும்ப பெற பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில் அவர்கள் விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மத்திய அரசின் பாடதிட்டமான சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தின் கீழ் கல்வி கற்கும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் இளந்தளிர் தமிழ் ஏடு என்ற புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் 47ஆம் பக்கத்தில் 'சமுதாய நண்பர்கள்' என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. அதில் பல்வேறு தொழில்களை செய்பவர்களின் பெயர்களை படங்களுடன் வெளியிட்டுள்ளனர். துணி துவைப்பவர்களை வண்ணார் என்றும் முடி வெட்டுபவர்களை நாவிதர் என்றும் பானை செய்பவர்களை குயவர் என்றும் செருப்பு தைப்பவர்களை சக்கிலியர் என்றும் படங்களுடன் வெளியிட்டுள்ளனர்.
சாதி பெயர்களை குறிப்பிட்டு குழந்தைகளுக்கு கற்பிப்பதுடன் குறிப்பிட்ட பெயர்களை செய்பவர்கள் குறிப்பிட்ட சாதியினை சார்ந்தவர்கள் என்ற கருத்தையும் பிஞ்சு குழந்தைகள் மனதில் பதிய வைக்கின்றனர். சாதிகள் இல்லையடி பாப்பா என்று கற்று கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு தற்போது சாதிகளின் பெயர்கள் கற்று கொடுக்கப்படுவது துரதிஷ்டவசமானது. இப்புத்தகத்தின் அணிந்துரையில் இப்புத்தகம் குழந்தைகளுக்கு மொழி அறிவுடன் பொது அறிவையும் வளர்ப்பதாக பெருமையுடன் கூறுகின்றனர். ஒழிக்கப்பட வேண்டிய சாதிய வேறுபாட்டை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதுதான் பொது அறிவை வளர்க்கும் முறையா என்ற கேள்வியும் எழுகிறது.
சாதிப்பிரிவினையை ஊக்குவிக்கும் இந்த புத்தகத்தை பாடதிட்டத்தில் இருந்து உடனடியாக நீக்குவதுடன் விநியோகம் செய்யப்பட்ட புத்தகங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது. இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை வைக்கிறது. மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கும் முன் அவற்றில் முரண்பாடான செய்திகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே கல்வித்துறை புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக