திங்கள், ஆகஸ்ட் 04, 2014

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்தியா ஆதிக்கம்: 64 பதக்கத்துடன் 5-வது இடம்

20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் கடந்த 23–ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் போட்டி முடிந்தது. கோலாகல நிறைவு விழாவுடன் காமன்வெல்த் விளையாட்டு திருவிழா முடிந்தது.

இந்தப்போட்டியில் இங்கிலாந்து 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம் ஆக மொத்தம் 174 பதக்கத்துடன் முதலிடத்தை பிடித்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து காமன்வெல்த் விளையாட்டில் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியா 49 தங்கம், 42 வெள்ளி, 46 வெண்கலம் ஆக மொத்தம் 137 பதக்கத்துடன் 2–வது இடத்தையும், கனடா 32 தங்கம் உள்பட 82 பதக்கத் துடன் 3–வது இடத்தையும், போட்டியை நடத்திய ஸ்காட்லாந்து 19 தங்கம் உள்பட 53 பதக்கத்துடன் 4–வது இடத்தையும் பிடித்தன.

215 வீரர், வீராங்கனைகளுடன் பங்கேற்ற இந்திய அணி 5–வது இடத்தை பிடித்தது. 15 தங்கம் 30 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 64 பதக்கங்கள் பெற்றது. டெல்லியில் கடந்த 2010–ம் ஆண்டு நடந்த காமன்வெல்த்தில் இந்தியா 38 தங்கம் உள்பட 101 பதக்கங்கள் குவித்து 2–வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது 37 பதக்கம் குறைந்து 5–வது இடத்துக்கு பின்தங்கியது.
மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல் ஆகிய 3 போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை பெற்று ஆதிக்கம் செலுத்தியது.

மல்யுத்தத்தில் அதிகபட்சமாக 13 பதக்கம் பெற்றது. இதில் 5 தங்கம் அடங்கும். சுசில் குமார், யோகேஸ்வர் தத், அமித்குமார், வினேஷ், பபிதாகுமாரி ஆகியோர் தங்கம் வென்றனர்.
மல்யுத்தத்துக்கு அடுத்தப்படியாக துப்பாக்கி சுடுதலில் இந்தியா 4 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம் உள்பட 17 பதக்கம் பெற்றது. அபினவ் பிந்த்ரா, அபுர்வி சண்டேலா, ராஹி சரோனா பாத், ஜிதுராய் ஆகியோர் தங்கம் வென்றனர்.

பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம் உள்பட 14 பதக்கம் கிடைத்தது. தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், சுகேன் தேய், சஞ்சிதா ஆகியோர் பளுதூக்குதலில் தங்கம் வென்றனர்.

பேட்மின்டன், தடகளம், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளில் தலா 1 தங்கம் பதக்கம் கிடைத்தது. ஸ்குவாஷ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சென்னையை சேர்ந்த தீபிகா பல்லிகல்– ஜோஸ்னா சின்னப்பா ஜோடி தங்கம் வென்றது. பேட்மின்டனில் காஸ்யப்பும், தடகளத்தில் விகாஸ் கவுடவுடம் (வட்டு எறிதல்) தங்கப்பதக்கம் வென்றனர்.

இந்திய அணி 14 விளையாட்டுகளில் பங்கேற்றது. இதில் நீச்சல், சைக்கிளிங். லான் பவுல்ஸ் ஆகிய 3 விளையாட்டுகளில் மட்டும் பதக்கம் கிடைக்கவில்லை. குத்துச்சண்டை போட்டியில் தங்கம் கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றமே. இதில் 4 வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக