திங்கள், ஆகஸ்ட் 11, 2014

களக்காடு அருகே ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் கார் மீது கல்வீச்சு: இந்து முன்னணியினர் 2 பேர் கைது

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரம் பரிசுத்த தோமா கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று சிறப்பு ஜெபக்கூட்டம் நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் கலந்து கொண்டு கிறிஸ்தவ பிரச்சாரம் செய்தார்.

இதுகுறித்து அறிந்த இந்து முன்னணியினர் அப்பகுதியில் திரண்டனர். மேலும் அவர்கள் அரசு பணியில் இருக்கும் அதிகாரி மதபிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதற்கிடையே பிரச்சாரத்தை முடித்து கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் அங்கிருந்து காரில் புறப்பட்டார். இந்து முன்னணியினரின் எதிர்ப் பால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

லெவிஞ்சிபுரம் விலக்கில் உமாசங்கர் கார் சென்ற போது இந்துமுன்னணியினர் அவரது காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் கார் வேகமாக சென்றது. அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி கார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது.இதில் காரின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. இதுகுறித்து காரின் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த குமாரவேல் (23) திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி திருக்குறுங்குடியை சேர்ந்த களக்காடு இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ரமேஷ் (33), வேலு மகன் மணிகண்டன் (23), நம்பி மகன் ஆறுமுகம், வைத்தீஸ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரமேஷ், மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

ஆறுமுகத்தையும், வைத்தீஸ்சையும் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக