ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் தனது பிரசாரத்தை சென்னையில் தொடங்கினார். நேற்று அவர் ஆந்திராவில் ஆதரவு திரட்டுவதற்காக ஐதராபாத்துக்கு சென்றார்.ஐதராபாத்தில், மாநில சட்டசபை கட்டிட வளாகத்தில் உள்ள ஜூபிளி அரங்கில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு பேசி ஆதரவு திரட்டினார். பின்னர் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக அங்குள்ள நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.
அவர் பேசி முடித்து விட்டு சென்ற சில நிமிடங்களில் அந்த அரங்கில் திடீரென தீப்பற்றியது. இதில், அந்தப் பகுதியே புகை மண்டலமாகியது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், இதில் ஏதாவது சதி வேலை உள்ளதா என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அஜய் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ஜூபிளி அரங்கு தீ விபத்து குறித்து முறையான, விரிவான விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை அளிக்குமாறு அவருக்கு முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக