சென்னை: திமுகவினர் இன்று நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் மிக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட திமுகவினரை எந்த மாநிலச் சிறையில் அடைத்தாலும் அதற்கு அவர்கள் பயப்பட மாட்டார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். திமுக சார்பில் இன்று நடந்த சிறை நிரப்பும் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கருணாநிதியை சந்தித்துக் கேட்டனர். இந்தப்
போராட்டம் வெற்றி பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு மிகப் பிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது என்றார் கருணாநிதி.
மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: திமுக அறப் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றி கிடைத்திருப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: உண்மையைச் சொன்னதற்காக நன்றி.
கேள்வி: தமிழக அரசின் காவலர் துறையினர் போராட்டத்தில் ஈடுபடவந்திருப்பவர்களை எல்லாம் பயமுறுத்துவதைப் போலப் பேசுகிறார்களே?
கருணாநிதி: எதிர்பார்த்தது தான்.
கேள்வி: எழுச்சி எவ்வாறு உள்ளது?
கருணாநிதி: எதிர்பார்க்காத அளவிற்கு உள்ளது. மிகப் பிரமாண்டமான அளவிற்கு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
கேள்வி: அடுத்த கட்டப் போராட்டம் என்ன?
கருணாநிதி: இந்தக் கட்டம் முதலில் முடியட்டும்.
கேள்வி: தமிழக அரசின் நிலை மாறுமா?
கருணாநிதி: நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்று ஒரு பழமொழி சொல்வார்கள். கலந்து கொள்வோரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப் போகிறோம். வேறு மாநில சிறைச் சாலைகளிலே வைக்கப் போகிறோம், கர்நாடகத்திற்கும், ஆந்திராவில் ஹைதராபாத்திற்கும் கொண்டு போகப்போகிறோம் என்றெல்லாம் அச்சுறுத்திப் பார்த்தார்கள். ஆனால் யாரும் பயப்படவில்லை. யாரும் கவலைப்படுவதாகவும் இல்லை.
கேள்வி: அதிமுக ஆட்சியினர் இந்தப் போராட்டத்திற்குப் பிறகு திருந்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?
கருணாநிதி: திருந்துவார்கள் என்று நம்பவில்லை. ஏனென்றால் அண்ணாவையே கைவிட்டவர்கள் அவர்கள். அண்ணா அவர்களின் பெயரால் உள்ள நூலகம் உலகத் தரத்தோடு கட்டப்பட்டது. அறிஞர்களாலும், சான்றோர்களாலும் வியந்து பாராட்டப்பட்டது. அந்த நூலகத்தை இழிவுபடுத்த வேண்டும், ஆபாசப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருமணங்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள். எனவே இந்த ஆட்சியினர் திருந்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார் கருணாநிதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக