புதன், ஜூலை 04, 2012

இஸ்ரேலை தாக்கும் திறன் படைத்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது ஈரான் !

ஈரான் ராணுவம் இஸ்ரேலை தாக்கும் திறன் படைத்த ஏவுகணையை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக ஏவி சோதித்துப் பார்த்தது. தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி தர தயாராக இருப்பதை உணர்த்தவே இத்தகைய சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.  இங்குள்ள காவிர் பாலைவனத்திலிருந்து ஷஹாப்-3 என்ற பெயரிலான இந்த ஏவுகணை
சோதித்துப் பார்க்கப்பட்டது. ஈரான் ராணுவம் ஒரு வார ராணுவ ஒத்திகையை நிகழ்த்தி வருகிறது. இந்த ஒத்திகை புதன்கிழமையுடன் நிறைவடைகிறது.
 ஷஹாப் - 3 ரக ஏவுகணை 2,000 கி.மீ. தூரம் சென்று இலக்கைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்ரேல் தாக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.  இதற்கு முன்பு ஷஹாப்-1 மற்றும் ஷஹாப் -2 ஆகிய குறுகிய தொலைவு ஏவுகணைகளை ராணுவம் சோதித்துப் பார்த்தது. இவை முறையே 300 கி.மீ. மற்றும் 500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் படைத்தவை.
 சுமார் 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பல்வேறு இடத்திலிருந்து ஏவப்பட்டு கார்வி பாலைவனத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் வகையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.  2,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த ஷஹாப்-3 ஏவுகணை, சோதனையின்போது 1,300 கி.மீ. தொலைவில் இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
 ராணுவ ஒத்திகையின் நிறைவு நாளன்று ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளை வீசும் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக ""இஸ்னா'' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹஜிஸôதே தெரிவித்தார். இஸ்தான்புல்லில் மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகள் ஈரான் அதிகாரிகளிடம் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுவது குறித்து பேச்சு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக