ஞாயிறு, மார்ச் 18, 2012

என் பெயரைக் கெடுக்க பெரும் பணம் செலவிடப்பட்டுள்ளது: ராணுவ தளபதி வி.கே.சிங்


 டெல்லி: ராணுவத்தில் தமது பெயரைக் கெடுப்பதற்காக பெரும் பணம் செலவிடப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி வி.கே.சிங் திடுக்கிட வைக்கும் புகாரைத் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய தளபதி
ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த தேதி குறித்து பெருத்த சர்ச்சை எழுந்தது. அவர் தனது பிறந்த தேதி 1951-ம் வருடம் மே 10-ந் தேதி என கூறி வந்தார். ஆனால் ராணுவ செயலாளர் அலுவலக ஆவணங்களில் அவரது பிறந்த தேதி 1950-ம் வருடம் மே 10-ந் தேதி என இருக்கிறது. இதன்படி அவர் வரும் மே மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறும் நிலையில் உள்ளார். இந்த நிலையில் அவர் தனது பிறந்த தேதி 1951-ம் வருடம் மே 10-ந் தேதி என திருத்தம் செய்ய வேண்டி, ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியிடம் விண்ணப்பித்தார். அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.கோகலே ஆகியோர் விசாரித்து, ராணுவ செயலாளர் நிலையை உறுதி செய்து, வி.கே.சிங்கின் பிறந்த தேதி 1950-ம் வருடம் மே 10-ந் தேதி என திட்டவட்டமாக அறிவித்தது. வி.கே.சிங்கின் வழக்கையும் உச்சநீதிமன்றம் திரும்பப்பெற வைத்தது.
இந்த நிலையில் வி.கே.சிங், ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது மதிப்பை குலைப்பதற்கு தேவையான செயல்களில் ராணுவத்தில் நிறைய பேர் ஈடுபட்டனர். ஏனெனில் ராணுவத்தில் நேர்மை நிலவுவதற்கு நான் எடுத்த நடவடிக்கைகளை அவர்கள் விரும்பவில்லை. எனது பிறந்த தேதி குறித்த தவறான சான்றிதழை பெறுவதற்கு எவ்வளவு பணம் செலவு செய்துள்ளனர் என நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் அடையாளர் காணப்பட்டுள்ளனர். ராணுவ விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 இந்த சதியில் ஈடுபட்டவர்கள் யார், யார் என்று கேட்கிறீர்கள். நிறைய பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். எனக்கு எதிராக கதைகள் கட்டிவிடுவதற்கு ஏராளமான பணம் தரப்பட்டுள்ளது. இந்தக் கதைகள் என் மதிப்பை குலைப்பதாகவும், போலியானதாகவும் அமைந்தது. ஆவணங்கள் எப்படி கசிந்தன என்பதற்கெல்லாம் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.
ராணுவம் போன்ற பெரியதொரு அமைப்பில், சிலர் தாங்கள் கவனிக்கப்படாமல் விடப்பட்டு விட்டதாக கருதலாம். அவர்கள்தான் தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள். நாங்கள் அவற்றை கண்டறிந்து விட்ட பிறகு, அவர்கள் எனக்கு எதிராக திரும்பி விட்டார்கள். ராணுவத்தில் யார் துரோகம் செய்தாலும், அவர்களுக்கு தண்டனை உண்டு
பிறந்த தேதி விவகாரம்
என் பிறந்த தேதி குறித்த விவகாரத்தை நான் நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றது பற்றி கேட்கிறீர்கள். அந்தப் பிரச்சினை ராணுவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்படி நான் அனுமதித்தது இல்லை. அதை என் தனிப்பட்ட பிரச்சினையாக கருத நான் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். பலர் வேண்டுமென்றே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் மனுக்களை தாக்கல் செய்ததால்தான் என் வயது பிரச்சினை வெளியே வந்தது. என் பிறந்த தேதியை போலியாக திருத்தி விட்டேன் என்று கருதித்தான் ஒட்டுமொத்த பிரச்சினையும் பெரிதுபடுத்தப்பட்டது. என் பிறந்த தேதியை நான் திருத்தவில்லை என்பதுதான் உண்மை.
ஏ.கே. அந்தோணி அலுவலக ஒட்டுக்கேட்பு
ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. அமைச்சரின் அலுவலகத்தில் ஒட்டு கேட்கப்பட்டதாக வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரம் அற்றவை. பிப்ரவரி 16-ந் தேதியன்று ராணுவ அமைச்சரின் மந்திரியின் அலுவலகத்தில் எங்கள் குழுவினர் சோதனை போட்டபோது சில முரண்பாடுகளை காண நேரிட்டது. இது குறித்து ராணுவ செயலாளருக்கு ராணுவ புலனாய்வு தலைமை இயக்குனர் தகவல் தெரிவித்து விட்டார். அந்த முரண்பாடுகள் ஏன் நேர்ந்தன என்பது குறித்து பிற புலனாய்வு அமைப்புகளைக்கொண்டு விசாரணை நடத்துமாறு ராணுவ செயலாளருக்கு ராணுவ புலனாய்வு தலைமை இயக்குனர் பரிந்துரை செய்தார் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக