திங்கள், மார்ச் 12, 2012

சவூதிப் பல்கலைக்கழக மாணவியர்மீது தாக்குதல் !

அப்ஹா: மன்னர் காலித் பல்கலைக்கழக மாணவிகள் சிலர் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அலுவலர்களால் தாக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) பல்கலைக்கழக மாணவர்கள் யாவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை (07.03.2012) தமக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளுக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாக மேற்படி மாணவிகள்
பேரணியொன்றை ஒழுங்குசெய்திருந்தனர்.
போராட்ட சுலோகங்களை முழங்கிக் கொண்டிருந்த மாணவியரை நோக்கி வந்த பல்கலைக்கழகப் பாதுகாப்பு அலுவலர்கள், கோஷமிடுவதை நிறுத்துமாறு மாணவியரைக் கண்டித்துள்ளனர். அதை மாணவிகள் மறுக்கவே, அவர்களைத் தாறுமாறாக அடித்துள்ளனர்.
"மாணவிகள் சத்தமிட்டுக் கோஷம் எழுப்புவது தமது பல்கலைக்கழக சட்டதிட்டங்களுக்கு முரணானது" எனப் பல்கலைக்கழக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், "தமது நியாயமான உரிமைகளுக்காகக் குரலெழுப்பிய ஒரே காரணத்தால், பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளை நாகரிகமின்றி அடித்து அடக்க முயல்வது எந்தவகை சட்டதிட்டங்களுக்கு அமைவானது?" என்று எதிர்க்கேள்வி கேட்டு அப்ஹா பிரதேசப் பொது மக்கள் மன்னர் காலித் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராகத் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
"பல்கலைக்கழக் நிர்வாகத்தின் செயல் காட்டுமிராண்டித்தனமானது" என்று கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்குத் தமது ஆதரவை வெளிக்காட்டும் வகையிலேயே மன்னர் காலித் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் ஞாயிறன்று வகுப்புகளைப் புறக்கணித்து கண்டனப் பேரணியில் பங்குகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக