புதன், மார்ச் 14, 2012

சம்ஜோதா:ஆதாரங்களை சேகரிக்க என்.ஐ.ஏ குழு இந்தூரில்!


 இந்தூர்:68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ் தலைவர் கமல்சவுகானை குண்டுவெடிப்புடன் தொடர்பு படுத்தும் ஆதாரங்களை சேகரிக்க தேசிய புலனாய்வு குழு(என்.ஐ.ஏ) இந்தூர் சென்றுள்ளது.
கூடுதல் சூப்பிரண்ட் உள்பட எட்டு உறுப்பினர்களை கொண்ட குழுவினர் ஆதாரங்களை சேகரிக்க அங்கு சென்றுள்ளனர். சவுகான் வெடிக்குண்டை தயாரித்து பெட்டிகளில் வைத்து டெல்லிக்கு கொண்டு சென்றதற்கான ஆதாரங்களை சேகரிப்பதுதான் என்.ஐ.ஏவின் நோக்கமாகும். கமல் சவுகான் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இந்தூரில் இருந்து வெடிக்குண்டுகளை தயாரித்து அதனை சம்ஜோதா எக்ஸ்பிரஸில் வைத்தது உள்பட அனைத்து நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக வாக்குமூலம் அளித்ததாக என்.ஐ.ஏ முன்னர் கூறியிருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் இதனை கமல் சவுகான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகையால் கமல் சவுகானின் வாக்குமூலத்திற்கு பலம் சேர்க்கும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ முயற்சி செய்துவருகிறது.
மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில்ஜோஷியும் குழுவினரும் வெடிக்குண்டை தயாரிப்பதற்கான பொருட்களை தயார் செய்த தேவாஸ் ஃபேக்டரியை என்.ஐ.ஏ பார்வையிடும். இங்குள்ள தொழிலாளர்களிடம் விசாரித்த பிறகு சவுகானை குறித்த தகவல் என்.ஐ.ஏவுக்கு கிடைத்தது. என்ஜீனீயரிங்கில் திறமைப் பெற்ற கமல் சவுகான் வெடிக்குண்டை தயாரித்ததில் முக்கிய நபர் என்று என்.ஐ.ஏ நம்புகிறது.
டெல்லியில் ஹஸ்ரத் நிஸாமுத்தீன் ஸ்டேசனில் வெடிக்குண்டுகளை கொண்டு சேர்க்க ரெயில் டிக்கெட்டை போலி பெயரில் வாங்கியதும் கமல் சவுகான் ஆவான். இதற்கான ஆதாரங்களும் என்.ஐ.ஏ குழு சேகரிக்கும். இந்தூர் மற்றும் டெல்லியில் ரெயில்வே ஸ்டேசன்களில் இருந்து சி.சி.டி.வி காட்சி பதிவுகளில் இருந்து வழக்கிற்கு தேவையான முக்கிய காட்சிகளை சேகரிக்க முயன்று வருவதாகவும் என்.ஐ.ஏ கூறுகிறது.
2007 பிப்ரவரி 18-ஆம் தேதி டெல்லியில் இருந்து லாகூருக்கு சென்று கொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக