டெல்லி: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசும் பாஜகவும் படுதோல்வி அடைந்துள்ளன.உத்தர்கண்ட் மாநிலத்தை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் பறிக்கவுள்ளது. பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ளது. கோவாவில் காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைப் பறிக்கவுள்ளது. மணிப்பூரில் ஆளும் காங்கிரஸே மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ளது.
முலாயம் ஆட்சியமைக்க காங். ஆதரவு தேவை:
குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அந்தக் கட்சிக்கு படுதோல்வி கிடைத்துள்ளது. இங்கு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி ஆட்சியைப் பிடிக்கவுள்ளது. இரண்டாவது இடத்தை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தில் பாஜகவும் உள்ளன. காங்கிரஸ் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் சமாஜ்வாடி கட்சி 148 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 83 இடங்களிலும் பாஜக 61 இடங்களிலும் காங்கிரஸ் 47 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. ஆனால், முலாயம் சிங்குக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், காங்கிரசின் ஆதரவுடனேயே அங்கு சமாஜ்வாடி ஆட்சிக்கு வர முடியும் சூழல் நிலவுகிறது.
உத்தர்கண்ட்டில் காங் முன்னிலை:
உத்தர்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிகிறது. இங்கு மொத்தமுள்ள 70 இடங்களில் காங்கிரஸ் 32 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
ஆரம்பத்தில் இந்த மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பாஜகவே மீண்டும் முதலிடத்தில் இருந்தது.
ஆனால், இப்போது காங்கிரஸ் முன்னணிக்கு வந்துவிட்டது. இந்த மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களில் முன்னணியில் உள்ளது. சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், சுயேச்சைகளும் சிறு கட்சிகளும் 6 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
இதனால் இந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரசுக்கு சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் உதவி தேவை. அதே போல இவர்களுக்கு பாஜகவும் குறி வைக்கலாம் என்று தெரிகிறது. மேலும் மாயாவதி கட்சியின் ஆதரவையும் பெறவும் பாஜக முயலலாம். இதனால் இந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது.
பஞ்சாபில் அசத்திய அகாலிதளம்-பாஜக கூட்டணி:
பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவுள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களிலும் காங்கிரஸ் 41 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. இந்த மாநிலம் மீண்டும் அகாலிதளம்-பாஜக வசம் போகவுள்ளது.
கோவாவில் பாஜக ஆட்சி:
கோவாவில் பாஜக தான் முன்னணியில் உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் இதுவரை முன்னணி நிலவரம் தெரிந்த 12 இடங்களில், 7 இடங்களில் பாஜக முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் வெறும் 3 இடங்களில் தான் முன்னணியில் உள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கவுள்ளது.
மணிப்பூரில் காங்கிரஸ்:
மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் முன்னணியில் உள்ளது. இதனால் இந்த மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைக்கவுள்ளது. மாநில கட்சியான மக்கள் ஜனநாயக முன்னணி எனப்படும் பிடிஎப் கட்சி 2 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக