சனி, மார்ச் 10, 2012

ம.பி:ஐ.பி.எஸ் அதிகாரி கொலை திட்டமிட்ட சதி: திக்விஜய்சிங் குற்றச்சாட்டு !

போபால்:மத்தியபிரதேச மாநிலத்தில் அண்மையில் கொலைச் செய்யப்பட்ட இளம் ஐ.பி.எஸ் அதிகாரியின் படுகொலை திட்டமிட்ட சதி என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுத்து நிறுத்த முயற்சித்த ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திர குமார் சிங் டிராக்டரால் ஏற்றி வியாழக்கிழமை கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுத்தொடர்பாக மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திக்விஜய்சிங் கூறியது:
ஐ.பி.எஸ். அதிகாரி கொல்லப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்த அதிகாரி நிலை தடுமாறி விழுந்து இறந்தார் என்பதை ஏற்க முடியாது. இந்தச் சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை. இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் எவ்விதப் பலனும் கிடைக்கப்போவதில்லை.
சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசு உண்மையிலேயே விரும்பினால் கடந்த 18 ஆண்டுகளாக அந்தத் தொழிலில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
அதாவது மத்தியப் பிரதேசத்தில் தான் முதல்வராக இருந்த 10 ஆண்டுகள், பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் சுரங்கத் தொழிலில் எப்படி நடந்து வருகிறது என்பதை விசாரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
திக்விஜய் சிங்கின் இந்தக் கருத்து குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகானிடம் கேட்டதற்கு, திக்விஜய் சிங் நம்பத்தகுந்த மனிதர் அல்ல என்றார்.
ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திர குமார் சிங் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வலியுறுத்தியுள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரியின் கொலை வழக்கை விசாரிப்பதை மாநில அரசு கடிமான நினைத்தால் அதை சிபிஐயிடம் ஒப்படைத்துவிடலாம். இதற்குத் தேவையான உதவியை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்தியப் பிரதேசத்தை பொறுத்தமட்டில் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள்தான். இது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக