ஞாயிறு, மார்ச் 04, 2012

இஸ்ரேலே ஹனாவை உடனே விடுதலைசெய்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஹனா அல் ஷலபி (வயது 30) எனும் இளம் பலஸ்தீன் பெண்மணியை விடுதலை செய்யக்கோரி இன்று (04.03.2012) ஹஷரோன் சிறைச்சாலை முன்னால் அமர்ந்து சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட அணிதிரண்டு வருமாறு பலஸ்தீனின் பிரபலமான மனித உரிமைப் போராளிகள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
எந்தவித நியாயமான காரணமும் இன்றித் தன்னைக் கைதுசெய்து தடுப்புக்காவலில் வைத்துள்ள
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் எதேச்சதிகாரப் போக்குக்குத் தன்னுடைய எதிர்ப்பைக் காட்டுமுகமாக ஹனா அல் ஷலபி கடந்த இரண்டு வார காலமாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை மானசீகமாக எதிர்த்தமையே என்னுடைய கைதுக்கான காரணம்" என்று குறிப்பிட்டுள்ள ஹனா, "இந்தக் காரணத்துக்காக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் மக்களைக் கைதுசெய்வதாக இருந்தால் முழுமொத்தப் பலஸ்தீன் மக்களையுமே அது கைதுசெய்து சிறையில் தள்ளவேண்டியிருக்கும். ஏனென்றால், அவர்கள் அனைவருமே இஸ்ரேலின் சட்ட விரோத ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களாகவும், பலஸ்தீன் விடுதலையை விழைபவர்களாகவுமே உள்ளனர். உலகிலேயே, மனிதர்களின் எண்ணங்களுக்காகவும் அவர்களைச் சிறையில் அடைக்கும் ஒரே ஒரு அரசாங்கம், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கமே!" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் புரட்சிப் பெண் ஹனாவுக்குத் தம்முடைய ஆதரவைத் தெரிவிக்குமுகமாகவும், நியாயமான எந்தக் காரணமும் இன்றி ஆண்கள், பெண்கள், சிறுவர், வயோதிபர் என்ற வேறுபாடுகளுக்கப்பால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பலஸ்தீன் பொதுமக்களை விடுதலைசெய்யக் கோரியும் பலஸ்தீனின் மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் தன்னார்வலர்களால் இந்த சாத்வீக எதிர்ப்புப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. தடுத்துவைக்கப்பட்டோர் நலன்புரி அமைப்பு, யூசுஃப் சித்தீக் நிறுவனம், ஹுர்ரிய்யத், தடுப்புக்காவலில் உள்ள பெண்களுக்கான அமைப்பு, ராபிதா முதலான அமைப்புக்கள் இப்போராட்டத்தை ஒழுங்குசெய்வதில் பிரதான பங்கேற்றுள்ளன.
இதேவேளை, ஹனாவின் விடுதலை குறித்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமுகமாக நாடெங்கிலும் எதிர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹனா இதற்கு முன்னரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக