சனி, மார்ச் 10, 2012

பட்டினியை போக்க சிறுநீரகத்தை விற்கும் கிராம மக்கள் !

பிந்தோல்:வாழ்க்கையை கழிக்க சிறுநீரகத்தை விற்று வருகின்றார்கள் மே.வங்காள மாநிலத்தில் உள்ள பிந்தோல் கிராம மக்கள். சிறுநீரகத்தை கேட்டு வரும் ஏஜண்டுதான் இவர்களது ஆபத் பாந்தவன். பெரும்பாலான வீடுகளில் சிறுநீரகத்தை விற்ற ஒரு நபரையாவது காணமுடியும். கிராம வாசிகளின் கடுமையான வறுமையை ஆதாயமாக கொண்டு
ஏஜண்டுகளும் பணத்தில் கொளுக்கின்றனர்.
பிந்தோல் கிராம வாசிகளை சிறுநீரகத்தை விற்பதற்கு தூண்டுவது பட்டினியாகும். விவசாயம் முற்றிலும் நசிந்துவிட்டது. வறண்டுபோன நிலங்களில் எங்கயேனும் சோள பயிரை காணலாம். கோதுமையும், நெல்லும் இல்லை. கிராமவாசிகளில் பெரும்பாலோர் பழங்குடியினர் ஆவர். வீட்டில் தயாரிக்கும் மதுபானத்தை அருந்தி எப்பொழுதும் போதையில் திளைப்பதால் இவர்களுக்கு வறுமையை குறித்து சிந்திக்க நேரம் இல்லை.
குடும்ப தலைவர் தாம் முதலில் சிறுநீரகத்தை விற்பார். தொழில் புரிய முடியாமல் இவர் படுத்த படுக்கையில் கிடக்கும் வேளையில் மனைவி மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களிடம் சிறுநீரகத்தை விற்க கட்டாயப்படுத்துவார். சிறுநீரகத்தை விற்பவர்கள் நோய் காரணமாக விரைவிலேயே மரணிப்பர்.
ஒரு சிறுநீரகத்திற்கு ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் ஏஜண்ட் பணத்தை அளிப்பார். சிறுநீரகத்தை வாங்குவோரிடமிருந்து ஏஜண்டுகளுக்கு கிடைப்பதோ மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வரையாகும். குட்டூ,ரஸாக் ஆகியோர் கிராமத்தில் முக்கிய சிறுநீரக ஏஜண்டுகள் ஆவர்.
35 வயதான லட்சுமிராம் ஹன்ஸ்தா மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்ற ரூ.80 ஆயிரம் ரூபாய்க்கு சிறுநீரகத்தை விற்றுள்ளார். அந்த பணத்தின் மூலம் சில மாதங்கள் வாழ்க்கை ஓடியது. அறுவை சிகிட்சைக்கு பிறகு அவரால் வேலை எதுவும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாக மனைவியும், பிள்ளைகளும் அவரை கைவிட்டுவிட்டனர்.
லபோங் சோரன் தனது சிறுநீரகத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அந்த பணத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். சிறிது பணத்தை மனைவியிடம் ஒப்படைத்துள்ளார். மீதிப்பணத்தை என்னச் செய்யவேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை.
ஆனால், அனிதஜாலி கூறுவதோ வேறொரு கதை. அனிதா, அவரது கணவர் மற்றும் கணவரின் தந்தை ஆகியோரின் சிறுநீரகங்களுக்கு ஏஜண்ட் ஆறு லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசியுள்ளார். ஆனால், இவர்களோ எட்டு லட்சம் ரூபாய் கிடைத்தாலே சிறுநீரகம் தருவோம் என்று கறாராக கூறிவிட்டனராம். சிறுநீரகத்தை விற்பனைச் செய்வதில் என்ன தவறு? என்று அனிதா கேட்கிறார். சிறுநீரகத்தை விற்றால் ஏற்படும் துயரத்தை அனுபவிக்க இக்கிராமவாசிகள் தயாராக இருப்பதால் அவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் எடுபடவில்லை என்று ஸ்ரீபூர் மஹிளா ஓ காதி உன்னயன் சமிதி என்ற அரசு சாரா அமைப்பு கூறுகிறது.
ஏஜண்டுகளான ரஸாக் மற்றும் குட்டுவின் மீது சிலர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீஸ் ரஸாக்கை கைது செய்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ரஸாக் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக