செவ்வாய், மார்ச் 06, 2012

சிறுபான்மை கல்விக்காக 5 துணைக் குழுக்கள்!

     புதுடெல்லி:சிறுபான்மை கல்விக்காக 5 துணைக் குழுக்களை உருவாக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு தொழில் அடிப்படையிலான கல்வி திட்டத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி
துணைக்குழுக்கள்உருவாக்கப்படும்.சிறுபான்மையினருக்கான பல்வேறு கல்வித் திட்டங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தேசிய கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல்   இதனை தெரிவித்தார்.
   

தேசிய கண்காணிப்புக் குழுவின் முஹ்டல் கூட்டம் நேற்று கபில் சிபலின் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. சிறுபான்மையினருக்கு தொழில் அடிப்படையிலான கல்வி திட்டத்தை அமுல்படுத்துதல், உருது-ஆங்கில மொழிகளை பரப்புதல், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பெண்களின் கல்வி, தகவல் சேகரிப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக ஐந்து கமிட்டிகள் உருவாக்கப்படும்.
மதரஸாக்கள் உள்பட சிறுபான்மை சமூகத்தினர் நடத்தும் கல்வி நிலையங்களில் கூடுதல் தொழில் அடிப்படையிலான கல்வி பாடங்களை துவங்க வேண்டும் என்று தேசிய கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். மதரஸா சான்றிதழ்களை தொடர் படிப்புக்காக அங்கீகரிக்கும் டெல்லி ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியை பிற பல்கலைக்கழகங்களும் பின்பற்றவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
மத கல்வியும், உலக கல்வியும் இணைந்து செயல்படுத்தும் கேரளா மாநிலத்தின் பாணி முன்மாதிரியானது என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனை கபில் சிபலும் ஒப்புக்கொண்டார். மத்ரஸாக்களை அவசரமாக நவீனப்படுத்த வேண்டும் என்று கருத்து எழுந்தது. அப்பொழுது சிலர், அது தேவையில்லை என்றும் தற்போதைய மதரஸா கட்டமைப்பு நவீனப்படுத்தப்பட்டதுதான் என்று கருத்து தெரிவித்தனர்.
பல மாநிலங்களிலும் உருது மொழி ஆசிரியர்கள் இல்லை, பாடப் புத்தகங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் கூட்டத்தில் வைக்கப்பட்டன.
மனித வளமேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக