வெள்ளி, மார்ச் 16, 2012

ஆப்கான்:16 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரனை பாதுகாக்க முயலும் நேட்டோ!


 காபூல்:ஆப்கானிஸ்தானில் கொடூரமாக குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேரை கொலைச் செய்த வெறி பிடித்த அமெரிக்க ராணுவ வீரனை பாதுகாக்க நேட்டோ முயற்சித்து வருகிறது. சம்பவம் நிகழ்ந்து பல நாட்கள் கழிந்த பிறகு ராணுவ வீரன் மீது வழக்குப் பதிவுச் செய்யவோ இதர நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ செய்யவில்லை.
         
இதனிடையே ஆப்கானில் அமெரிக்காவிற்கு எதிரான எதிர்ப்பு வலுத்து வருகிறது. கொடூர படுகொலைகளை செய்த ராணுவ வீரனின் பெயரையோ, இதர விபரங்களையோ வெளியிட நோட்டோ படை தயாரில்லை. சம்பவம் நிகழ்ந்து பல நாட்கள் கழிந்த பிறகு வழக்கு பதிவுச் செய்யவோ விசாரணையை மேற்கொள்ளவோ செய்யாமல் நேட்டோ காலம் கடத்தி வருகிறது. வழக்கு எப்பொழுது பதிவுச் செய்யப்படும் என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் அதற்கு வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம் என்று ஆப்கானில் நேட்டோ செய்தி தொடர்பாளர் கேப்டன் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சிக்கலான சட்ட நடைமுறைகள் மூலமே ராணுவ வீரன் மீது நடவடிக்கை எடுக்க இயலும் என்று கிர்பி குறிப்பிட்டார். அமெரிக்க ராணுவத்தின் சி.ஐ.டி பிரிவு இச்சம்பவத்தில் புலனாய்வை மேற்கொண்டுள்ளது. அவர்கள் கண்டுபிடித்தவை உயர்மட்ட குழுவிடம் அளிக்கப்படும்.
ஆப்கானில் நேட்டோ படையின் தலைவரும், அமெரிக்க கமாண்டருமான ஜெனரல் ஜான் ஆலனிடம் ஒப்படைக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் துவங்கும். சி.ஐ.டி பிரிவு ராணுவம் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும் அவர்கள் எதனை விசாரிக்கிறார்கள் என்பது குறித்து தெரியாது என்றும் ஜான் கிர்பி கூறினார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்க வீரன் தற்போதும் ஆப்கானில் உள்ளதாக கூறிய கிர்பியிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய பிறகும் ராணுவ வீரனைக்குறித்த எத்தகவலையும் வெளியிட ஜான் கிர்பி மறுத்துவிட்டார்.
வாஷிங்டன் மாநிலத்தைச் சார்ந்த இந்த ராணுவ வீரன் அமெரிக்காவின் ஈராக் போரிலும் பங்கேற்றுள்ளார் என்பது மட்டுமே ராணுவ வீரன் குறித்து வெளியிட்டப்பட்ட தகவலாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராணுவ வீரனுக்கு மரணத்தண்டனை வரை கிடைக்கலாம் என்று நேற்று முன்தினம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேட்டா கூறியிருந்தார். ஆப்கானில் தீவிரமடைந்து வரும் போராட்டத்தை தணிக்க பனேட்டா இவ்வாறு கூறியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதனிடையே குற்றவாளியான ராணுவ வீரனின் தலையை வெட்டுவோம் என்று தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தங்களது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக