தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கம்பம் பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கேரள எல்லை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மற்ற மாவட்ட மக்களும் எல்லையில் குவிந்து வருகின்றனர். நேற்று க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி கிராம மக்கள் எல்லை நோக்கி புறப்பட்டனர். கம்பம்மெட்டில் குவிந்த சுமார் 30 ஆயிரம் பேரில் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதை கண்டித்து கம்பத்தில் பல இடங்களில் சாலை மறியல் நடந்தது. எல்லை தாண்டுவோரை சுட்டுத் தள்ள கேரள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், தமிழக மக்கள் கேரள எல்லைக்கு செல்லாமல் தடுக்க கம்பம், குமுளி பகுதியில் மட்டும் 8,000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல் கம்பம், கூடலூர் பகுதிக்கு தேனியில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியில் 50க்கும் அதிகமான கிராம மக்கள், இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கி உள்ளனர். கேரள மற்றும் மத்திய அரசை கண்டித்து இன்று வியாபாரிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள் ஓடவில்லை. கம்பத்தில் இன்று காலை அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன பேரணி நடத்தினர். போடியில் கட்டிட தொழிலாளர், பஞ்சு மெத்தை தொழிலாளர்கள், பெயின்டர்கள் சங்கம், நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
உப்புக்கோட்டை, குச்சனூர், பாலார்பட்டியில் தண்ணீருக்காக தட்டு ஏந்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமனூரில் 200 பேர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டியில் வர்த்தகர்கள் பேரணி சென்றனர். கம்பத்தில் முஸ்லிம்கள் சார்பில் கேரள அரசை கண்டித்து பேரணி நடந்தது. தேனியில் உள்ள கேரள பிரமுகருக்கு சொந்தமான இன்டர்நேஷனல் ஓட்டல் மீது இன்று அதிகாலை சிலர் கல்வீசி தாக்கினர். இந்நிலையில், கூடலூர் அருகே உள்ள சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக இன்று குமுளி நோக்கி சென்றனர். உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரம், மூணாண்டிபட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 10ஆயிரம் பேர் கேரள எல்லையான சாக்கலூத்து மெட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
போடி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கேரள எல்லையான போடி மெட்டில் சுவர் எழுப்புவதற்காக செங்கல், மணல், சிமென்ட் உள்ளிட்டவற்றுடன் புறப்பட்டு சென்றனர். மேலும் பலர் அங்கு தங்கி சமைத்து சாப்பிட வாகனங்களில் சமையல் பாத்திரம், அரிசி, காய்கறிகளுடன் சென்றனர். குமுளி, சாக்கலூத்து, போடி மெட்டு, கம்பம்மெட்டு என அனைத்து கேரள எல்லையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் தமிழக - கேரள எல்லையில் இன்றும் பெரும் பதற்றம் நிலவியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், சிறுவணிகர்கள், வியாபாரிகள் சார்பில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. தேனியில் நாளை கேரள அரசை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. நாளை மாலை திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன.
பொள்ளாச்சி காய்கறி வியாபாரிகள் கேரளாவில் விரட்டியடிப்பு
பொள்ளாச்சியில் இருந்து 20 கிமீ தூரத்தில் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை உள்ளது. இதை அடுத்த புதுநகரம், நெம்மாரா, பாலக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் பொள்ளாச்சியை சேர்ந்த காய்கறி வியாபாரிகள் சரக்கு ஆட்டோக்கள் மூலம் தினசரி காய்கறி கொண்டு சென்று 2 நாட்கள் கிராமங்களில் ஆங்காங்கே நிறுத்தி விற்று வருகின்றனர்.
பொள்ளாச்சி அடுத்த குஞ்சுபாளையத்தை சேர்ந்த நாகராஜன், மாரிமுத்து, ஆனந்த் ஆகியோர் நேற்றுமுன்தினம் கேரளா சென்றிருந்தனர். நேற்று இரவு 3 பேரும் திரும்பி வந்து கூறுகையில், ÔÔநெம்மாரா பகுதியில் நேற்று முன்தினம் காய்கறி வியாபாரம் செய்தபோது அப்பகுதியினர் எங்களை தாக்கினர். இனிமேல் இங்கு வர கூடாது என்று விரட்டினர். அங்கிருந்து வரும் வழியெங்கும் பலர் தாக்க முயற்சித்தனர்ÕÕ என்று கூறினர்.
கொடைக்கானல் கேஆர் கலையரங்கம் அருகே கேரளாவை சேர்ந்த சந்திரபாபு டீக்கடை வைத்துள்ளார். நேற்று மாலை ஒரு கும்பல் கடையை அடித்து நொறுக்கியது. இதுதொடர்பாக பாமக நகர செயலாளர் முருகன் (31), மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன் (40), ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக