நேற்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் அணி, அணியாக சென்றனர். பொது மக்களை பல்வேறு இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடையை மீறி அவர்கள் ஆவேசத்துடன் சென்றனர். பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடை பெற்றது. இன்று 3-வது நாளாக தேனி மாவட்ட மக்கள் கேரள எல்லை நோக்கி சென்றனர். அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, குச்சனூர், சடையனூர், மார்க்கேயன் கோட்டை, உ.அய்யம்பட்டி உள்பட 25 கிராம மக்கள் திரண்டு கூடலூர் புறப்பட்டு சென்றனர்.
ஆனால் அவர்களை போலீசார் கம்பம் காந்தி சிலை முன்பு தடுத்து நிறுத்தி கூடலூர் செல்லக்கூடாது என்று திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் கம்பம் மெட்டு வழியாக கேரள எல்லைக்கு புறப்பட்டனர். அவர்கள் டிராக்டர், வேன், லாரிகளில் கம்பம் வழியாக கேரள எல்லை நோக்கி புறப் பட்டனர். ஏராள மான இளைஞர்கள் கையில் தடி, இரும்பு கம்பிகளுடன் இருசக்கர வாகனங்களில் சென்றனர். இன்று காலை 10 மணிக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
நேரம் செல்ல செல்ல மேலும் சில கிராம மக்களும் திரண்டு வந்தனர். கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு செல்வதற்காக மலைப்பாதையில் செல்லும் போது 4-வது வளைவு மலைப்பாதையில் தமிழக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் முற்றுகையிட சென்றவர்கள் போலீசாரை தள்ளிவிட்டு செல்ல முயன்றனர். இதனிடையே போலீசார் மீதும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தடியடி நடந்ததும் மலைப்பாதையில் மேலே செல்ல சென்றவர்கள் மீண்டும் கம்பம் நோக்கி திரும்பத் தொடங்கினர்.
தமிழக- கேரள எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர். தமிழக எல்லைப் பகுதியில் பதட்டத்தை தணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று இரவு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் கம்பம் விரைந்தார். பின்னர் தமிழக எல்லையான லோயர் கேம்ப் சென்றார். நள்ளிரவு 12 மணி அளவில் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் அதி காரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், டி.ஐ.ஜி. சஞ்சய்மாத்துர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீண்குமார் அபினபு, மதுரை அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மற்றும் 40 போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கேரளா நோக்கி செல்லும் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பது குறித்தும், சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து பாதைகளையும் மூட வேண்டும், பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக