வெள்ளி, ஜூலை 13, 2012

டென்மார்க் வனவிலங்கு பூங்காவில் வாலிபரை உயிருடன் தின்றது புலி

டென்மார்க் வனவிலங்கு பூங்காவில் வாலிபர் ஒருவரை, உயிருடன் புலி கடித்து தின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 150 ஆண்டுக்கு மேல் பழமையானது. இங்கு பல அரிய உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள கூண்டில் 3 சைபீரிய புலிகள் அடைத்து
வைக்கப்பட்டுள்ளன. பூங்கா ஊழியர் ஒருவர் நேற்று காலை புலிக்கு இறைச்சி போட சென்ற போது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் துண்டு துண்டாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து வாலிபரை சிதைந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் லார்ஸ் போர்க் கூறியதாவது: புலிகள் பராமரிக்கப்படும் இடத்தின் சுற்றுச்சுவரை தாண்டி வாலிபர் எப்படி உள்ளே சென்றார் என்பது தெரியவில்லை. வாலிபருக்கு 21 வயது இருக்கும்.
அவருடைய குரல்வளை, தொடை, முகம் போன்ற பகுதிகளில் புலிகள் கடித்து குதறியுள்ளன. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் புலி கூண்டுக்குள் சென்று விட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். வனவிலங்கு பூங்காவில் உள்ள எல்லா கேமராக்களிலும் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். பலியான வாலிபர் வெளிநாட்டை சேர்ந்தவர். டென்மார்க் குடியுரிமை பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாலிபரை புலிகள் கொன்றுள்ளது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு லார்ஸ் கூறினார்.
வனவிலங்கு பூங்கா மேலாளர் ஸ்டெப்பன் ஸ்ட்ராட் கூறுகையில், பூங்காவின் 152ஆண்டு வரலாற்றில் இதுவரை இப்படி நடந்தது இல்லை. புலி கூண்டுக்குள் நுழைய வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அதை தடுக்க முடியாது. இந்த சம்பவத்தால், பூங்கா பாதுகாப்பை மறு ஆய்வு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புலிகள் கொன்ற வாலிபரின் பெயர், அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக