ஞாயிறு, மார்ச் 04, 2012

அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது

அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது   "அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின், அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார்.  "ஈரானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்பவர்கள், 1980-1988 காலப்பகுதியில் ஈராக்-ஈரான் யுத்தத்தில் சுமார் எட்டு வருடகாலம்
சளைக்காமல் தன்னைத் தற்காத்துக்கொண்ட அதன் வல்லமையை நினைவுகூர்வது நல்லது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 "ஈரானியப் புரட்சி இடம்பெற்ற ஆரம்ப காலத்தில் போதியளவு பயிற்றுவிக்கப்படாத படையணிகளும், போதிய இராணுவத் தளபாடங்களும் அற்ற நிலையிலும் அந்த நாடு, நன்கு தேர்ச்சிபெற்ற, ஆயுத பலம் மிகுந்த ஈராக்கியப் படைகளை வெற்றிகரமாய் எதிர்கொண்டுள்ளது. இத்தனைக்கும் ஈராக் படைகளுக்கு அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் பரிபூரண ஒத்துழைப்பும் இருந்தமை குறிப்பிடத்தக்கது" என அவர்  சுட்டிக்காட்டினார்.

   "ஐக்கிய அமெரிக்காவின் உண்மையான உள்ளக நிலை கவலைக்கிடமானது. வெளியுலகுக்குத் தெரியும் அளவுக்கு அதன் மாநிலங்கள் வலுவாக ஒருங்கிணைந்து காணப்படவில்லை. அதன் தென் மாநிலங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் பெரிதும் அதிருப்தியுற்றுள்ளன. அவை, வெகு சீக்கிரத்தில் வாஷிங்டன் அரசாங்கத்தில் இருந்து தனித்தனியாகப் பிரியும் நிலை உருவாகும். இத்தகையதோர் நெருக்கடியான நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிராகப் போரில் இறங்குமானால், அது, அமெரிக்காவை அழிவுக்கே இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

  அண்மைக் காலமாக அமெரிக்க, இஸ்ரேலிய நாடுகள் ஈரானுக்கு எதிராகக் கடும்போக்கான நிலைப்பாட்டையே கைக்கொண்டு வருவதும், ஈரானுக்கு எதிரான தாக்குதல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசித்தும் எச்சரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக