பல கோடி ரூபாய் முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக தெல்கி கைதானார். தற்போது இவர் பெங்களூர் ஜெயிலில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் தெல்கியுடன் போலீஸ் அதிகாரிகள் கே.கே. பார்மர், ஏ.பி. சன் வாக்கர், கான்பாத் ஜாதவ் ஆகியோர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்தது. சாட்சிகள் விசாரணை ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதையடுத்து இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. பெங்களூர் ஜெயிலில் இருக்கும் தெல்கியிடம் “வீடியோ கான்பரன்சிங்” மூலம் நீதிபதி கேள்வி கேட்டார்.
அப்போது தெல்கி, “எனக்கு சர்க்கரை வியாதி, இதயக்கோளாறு, சிறுநீரக பாதிப்பு உள்ளது. முடக்கு வாதம் காரணமாக கால்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அவசரமாக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கிறது.
எனது மனைவியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கிறார். எனது பாங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. எனவே அபராதம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறேன். திருமண வயதில் எனக்கு மகள் இருக்கிறார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 7-ந்தேதியில் இருந்து ஜெயிலில் இருக்கிறேன். எனவே, எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் நீதிபதி வழங்கிய தீர்ப்பில், போலி முத்திரைத்தாள் மூலம் பலகோடி ரூபாய் மோசடி செய்த தெல்கிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவருடன் மோசடிக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரி பர்மருக்கு 6 ஆண்டுகள், சன்வாக்கருக்கு 4 ஆண்டுகள், ஜாதவ்க்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 7 பேர் ஜெயிலில் இருந்த காலம் தண்டனை காலமாக கருதி விடுதலை செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக