காஸா: காஸா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் போர்விமானங்கள் மேற்கொண்டுவரும் பயங்கரவாதத் தாக்குதலின்போது படுகாயமடைந்த ஏழு வயது பலஸ்தீன் பாலகன் பரகா அல் மஃரிபி, கடந்த புதன்கிழமை (14.03.2012) அதிகாலை உயிரிழந்துள்ளான்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் அடாவடித் தாக்குதலில் படுகாயமுற்று காஸா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்படி சிறுவன் சிகிச்சைகள் பலனளிக்காமல் உயிர் நீத்துள்ளான்.
காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் போர் விமானங்கள் நடாத்திவரும் ஏவுகணைத் தாக்குதல்களினால், உயிரிழப்புகள் மட்டுமின்றி, காஸாவாழ் பொதுமக்களின் ஏராளமான உடைமைகளும் சேதமடைந்துள்ளன.
இஸ்ரேலியப் பாதுகாப்பைப் பலப்படுத்துதல் என்ற பெயரில் பலஸ்தீன் பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடாத்திவரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி, உலகின் பல பாகங்களிலும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் எதிர்ப்புப் பேரணிகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே, உலகெங்கிலுமுள்ள மனிதநேய ஆர்வலர்கள் இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்தையிட்டு தமது அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
என்றாலும்,' தான் எதைச் செய்தாலும் உலக வல்லரசான அமெரிக்கா கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும்' என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல், தன்னுடைய அடாவடித்தனங்களை எந்தவிதத் தயக்கமும் இன்றித் தொடரவே செய்யும் என அரசியல் அவதானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக