புதன், மார்ச் 07, 2012

ராகுல்காந்தியின் உத்தரப்பிரதேச கனவு கலைந்தது !

2007-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வெறும் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 22 இடங்களில் வெற்றிபெற்று பிற கட்சிகளை ஆச்சரியப்பட வைத்தது.  இதையடுத்து ஆட்சியை கைப்பற்றும் குறிக்கோளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.
அவருக்கு பக்கபலமாக, அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் வலம் வந்தனர். 

உத்தரப் பிரதேசத்தில் இந்த முறை அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் காங்கிரஸ் 357 இடங்களில் போட்டியிட்டது. அதில், 40 இடங்களை மட்டுமே கைப்பற்றும் நிலையில் உள்ளது. 


இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "சமாஜ்வாடி கட்சிக்கும், முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு வாழ்த்துகளைச் சொல்ல விரும்புகிறேன். 


முன்னணியில் இருந்தாலும், தோல்வி அடைந்தாலும், அதற்கான பொறுப்பை நானே ஏற்கிறேன். 


உத்தரப் பிரதேசத்தின் கிராம மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறேன். தொடர்ந்து அவர்களின் முன்னேற்றத்துக்கு துணையாக இருப்பேன். 


இந்தத் தோல்வி ஏன் என்று அலசுவதற்கு இன்னும் சில காலம் தேவை. உத்தரப் பிரதேசத்தில் அடிப்படையிலேயே காங்கிரஸ் வலுவற்றதாக இருக்கிறது. இது, எனக்கு ஒரு நல்ல பாடமாக கருதுகிறேன். 


அதேவேளையில், கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸுக்கு ஓரளவு முன்னேற்றமான சூழல் நிலவி வருகிறது," என்றார் ராகுல் காந்தி. 


இதனிடையே, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திக்விஜய் சிங் கூறுகையில், "சமாஜ்வாடிக்கு ஆதரவு தருவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். 


இந்தத் தேர்தலில் ராகுல் காந்தி கடுமையாக போராடினார். மிகத் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 


உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றியதை எங்களது வெற்றியாக கருதுகிறோம்," என்றார் திக்விஜய் சிங்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக