வியாழன், ஜனவரி 22, 2015

பலரது உயிரை காப்பாற்றிய இஸ்லாமிய இளைஞருக்கு பதக்கம் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை

பிரான்சில் கடந்த மாதம் சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து பலரது உயிரைக் காப்பாற்றிய லஸ்ஸானா என்ற இஸ்லாமிய இளைஞருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. அவருக்கு குடியுரிமை வழங்கும் விழாவில் பிரான்சின் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 
மாலியை தாய்நாடாக கொண்ட 24 வயது இஸ்லாமிய இளைஞரான லஸ்ஸானா பதிலி, பிரான்சின் கிழக்கு பாரிஸ் பகுதியில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். கடந்த 9 ஆம் தேதியன்று அந்த சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்து தீவிரவாதி ஒருவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு வாடிக்கையாளர்கள் பலியாகினர். அச்சமயம் லஸ்ஸானா கடைக்குள் இருந்த 15 வாடிக்கையாளர்களை அடித்தளத்திலுள்ள குளிர் சாதன அறைக்கு கொண்டு சென்று விளக்குகளை அணைத்துவிட்டு அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சொல்லி பாதுகாப்பாக வைத்துள்ளார். 

பின்னர் தைரியமாக தப்பித்து வெளியேறிய லஸ்ஸானா வெளியே இருந்த காவல் துறையினரிடம் கடையின் அமைப்பையும் தீவிரவாதி இருக்கும் இடத்தையும் விளக்கி தாக்குதலுக்கு உதவியுள்ளார். பின்னர் காவல்துறை நடத்திய தாக்குதலில் தீவிரவாதி கொல்லப்பட்டான். உயிர் பிழைத்த பிணை கைதிகள் ஓடி வந்து லஸ்ஸானாவை கட்டிப்பிடித்து பாராட்டினர். 

இவரது வீரத்தை போற்றும் விதமாக அந்நாட்டு அரசு விழா ஒன்றை நடத்தி அவருக்கு பிரெஞ்சு குடியுரிமையும் பதக்கமும் வழங்கி சிறப்பித்தது. விழாவில் பேசிய லஸ்ஸானா "எல்லோரும் என்னை ஹீரோ என்கிறார்கள். நான் ஹீரோ இல்லை. நான் வெறும் லஸ்ஸானா மட்டும்தான்" என்று தன்னடக்கத்துடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக