ஞாயிறு, ஜனவரி 18, 2015

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பிப்ரவரி 1–ந் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.

நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா), இரண்டாம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3–ம் நிலை வீரர் ரபெல் நடால், (ஸ்பெயின்), நடப்பு சாம்பியனும், 4–ம் நிலை வீரருமான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஆகியோர் இடையே சாம்பியன் பட்டம் பெற கடும் போட்டி நிலவுகிறது.

27 வயதான ஜோகோவிச் 7 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 3 முறை (2011, 2012, 2013) கைப்பற்றினார். கடந்த தடவை கால் இறுதியில் தோற்றார். கடந்த ஆண்டு அவர் விம்பிள்டன் பட்டத்தை மட்டுமே வென்றார்.33 வயதான ரோஜர் பெடரர் 17 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை புரிந்து இருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 4 தடவை (2004, 2006, 2007, 2010) வென்று உள்ளார். கடந்த 4 முறையும் அவர் அரை இறுதியில் தோற்றார். கடந்த ஆண்டும், 2013–ம் ஆண்டும் அவர் எந்த கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லவில்லை.

29 வயதான நடால் 14 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 9 முறை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஒரு தடவை மட்டுமே (2009) கைப்பற்றினார். கடந்த முறை இறுதிப்போட்டியில் தோற்றார். கடந்த ஆண்டு காயம் காரணமாக 3 மாதங்களுக்கு மேல் விளையாடவில்லை.

25 வயதான வாவ்ரிங்கா ஒரே ஒரு கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். அவர் சமீபத்தில் சென்னையில் நடந்த ஏடிபி போட்டியில் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் யூகிபாம்ப்ரிக்கு தொடக்கமே சவாலானது. அவர் 6–ம் நிலை வீரரான ஆண்டி முர்ரேயை (இங்கிலாந்து) முதல் சுற்றில் சந்தித்து உள்ளார்.

பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) மரியா ஷரபோவா (ரஷியா), ஷிமோனா ஹால்ப் (ருமேனியா) குவிட்டோ வா (செக்குடியரசு) ரட்வன்னிகா (போலாந்து), இவானோவிக் (செர்பியா) பவுச்செர்ட் (கனடா) ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக