சனி, ஜனவரி 24, 2015

40 ஆண்டுகளில் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கிய பிரியாணி பாபா

ஆந்திர மாநிலத்தில் வாழும் ‘பிரியாணி பாபா’ என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக தினந்தோறும் ஏழை பக்தர்களுக்கு சாதி, மத, பேதமின்றி பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இதுவரை சுமார் 1 கோடி ஏழைகளுக்கு இவர் பிரியாணி தானம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில் அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா (78) என்பவரை அப்பகுதி மக்கள் அன்புடன் ‘பிரியாணி பாபா’ என்றழைக்கின்றனர். இவரது குருவான காதர் பாபா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.

அவரது சிஷ்யரான பிரியாணி பாபா, தனது குருவின் நினைவாக அவரது தர்காவின் அருகே டன் கணக்கில் ஆடு, கோழிகளை வெட்டி ஏழை பக்தர்களுக்கு பாசுமதி அரிசியில் நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிரியாணியை தினந்தோறும் அன்னதானமாக வழங்கி வருகிறார். இவரது பக்தர்கள் வழங்கும் நன்கொடையிலிருந்து இந்த பிரியாணி தயாரிக்கப்படுகிறது.

இதை தயாரிக்க ‘பிரியாணி பாபா’வே களத்தில் இறங்கி பணியாற்றுகிறார். இவருக்கு பக்தர்கள் மட்டுமின்றி நல்ல உள்ளம் படைத்த சில கொடையாளர்களும் பணம் அளித்து உதவி புரிகின்றனர். தினந்தோறும் சுமார் ஆயிரம் ஏழைகளுக்கு சுடச்சுட மணம் கமழும் சுவையான பிரியாணி பரிமாறப்படுகிறது. விசேஷ நாட்களில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ‘பிரியாணி பாபா’ கூறுகையில், ’ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு என்பது மிகவும் அத்தியாவசியமானது. பக்தர்கள் நன்கொடை அளிப்பதால்தான் என்னால் பல ஏழை மக்களின் பசியை போக்க முடிகிறது. கடந்த 40 ஆண்டு காலத்தில் சுமார் 1 கோடி பக்தர்களுக்கு பிரியாணியை அன்னதானமாக வழங்கியிருக்கிறோம். எனக்கு பிறகும் இது தொடர வேண்டும் என்பதே என் கோரிக்கை.

நான் ஜாதி, மதங்களை நம்புவதில்லை. ஏழை மக்களுக்கு சேவை செய்யும்படி என் பக்தர்களையும் அறிவுறுத்தி வருகிறேன்” என்று கூறுகிறார்.ஆண்டுதோறும் ஜனவரி 25-ம்தேதி இவர் நடத்தும் ‘இலவச பிரியாணி திருவிழா’ விஜயநகரம் முழுவதும் மிகவும் பிரபலமானது என உள்ளூர் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக