திங்கள், அக்டோபர் 31, 2011

பரத்பூர் துப்பாக்கிச்சூடு:முஸ்லிம்கள் நீதி தேடி டெல்லியில் போராட்டம்

புதுடெல்லி:குஜ்ஜார்களுடனான மோதலின் பெயரால் போலீஸாரால் 10 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பரதபூரில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்கான இறுதிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களது போராட்டத்தை டெல்லிக்கு மாற்றியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக வருகிற செவ்வாய்க்கிழமை(நாளை) ராஜ்காட்டிலிருந்து பேரணி நடத்தப்படும். இச்சம்பவத்திற்கு காரணமான ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்திதரிவாலை மாற்றும் வரை போலீஸாரால் கொலைக்களமான மஸ்ஜிதை சுத்தப்படுத்தவோ,தொழுகை நிறைவேற்றவோ செய்யமாட்டோம் என முஸ்லிம்கள் அறிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோபால்கரில் அடக்கஸ்தலம்(கப்றுஸ்தான்) தொடர்பான தகராறில் போலீசார் மஸ்ஜிதிற்குள் நுழைந்து முஸ்லிம்களை சுட்டுக்கொன்றனர். அத்துடன் திருக்குர்ஆனை அவமதித்துள்ளனர். கொலைச்செய்யப்பட்டவர்களின் இரத்தம் மஸ்ஜிதில் தற்பொழுதும் கெட்டிக்கிடக்கிறது. நீதிக்குவேண்டி போராடுவதற்காக கோபால்கர் முஸ்லிம்கள் நேற்று முன்தினம் ஆக்‌ஷன் கமிட்டியை உருவாக்கினர். டாக்டர்.மஹ்மூத் கான் கமிட்டியின் தலைவராக தேர்வுச்செய்யப்பட்டார்.
10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காணாமல் போன இரண்டு முஸ்லிம்களை கண்டுபிடித்தல், கப்றுஸ்தான் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைத்தல், போதுமான இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் அடங்கியுள்ளன. சாந்தி தரிவாலையும், முதல்வர் அசோக் கெலாட்டையும் நீக்கக்கோரி ராஜஸ்தான் மாநில ஆளுநர் சிவராஜ் பாட்டீலுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக