செவ்வாய், அக்டோபர் 25, 2011

துனிஷியா: வெற்றிப்பாதையில் இஸ்லாமிய கட்சி


‘அரபு வசந்தம்’ என்றழைக்கப்படும் அரபுலகப் புரட்சிக்கு அடிகோலிய துனிஷியாவின் புதிய அரசுக்கான பொதுத் தேர்தல் ஞாயிறன்று (23 10 2011) அமைதியாக நடந்து முடிந்தது அறிந்ததே. புதிய அரசைத் தேர்ந்தெடுக்க உள்ள துனிஷியர்களின் விருப்பமாக இஸ்லாமியக் கட்சியான அந்நஹ்தா (Ennahda) உள்ளதாக துனிஷியாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் இன்று (25.10.2011) மதிய நேரம் முழுமையாக வெளியிடப்பட உள்ளன
மொத்தம் உள்ள 217 நாடாளுமன்ற இடங்களில், இதுவரை முடிவு தெரியவந்துள்ள அயல்நாடு வாழ் துனிஷியர்களுக்கான 18 இடங்களில் ஒன்பது இடங்களை ரஷீத் கன்னோச்சியின் அந்நஹ்தா கட்சி வென்றுள்ளது.
இந்த 18 ல் மீதமுள்ள 9 இடங்களில் ‘ஃபாரம்’ கட்சி நான்கு இடங்களையும், மூன்று இடங்களை ‘குடியரசுக் காங்கிரஸ்’ (Congress for republic) என்னும் கட்சியும் பெற்றுள்ளன. இவை இடதுசாரி கட்சிகளாகும்.
இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளின் வழியாக, ‘அந்நஹ்தா’வே அதிகப் பெரும்பான்மை பெறும் என்று தெரிய வந்துள்ளது
“முப்பது சதவிகிதத்திற்கும் மேலான இடங்களை வெல்வோம்” என்று அந்நஹ்தா கட்சியின் பிரச்சார மேலாளர் அப்துல்ஹமீத் ஜெலசி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “எந்த விதத்தில் முடிவு அமைந்தாலும், ஏற்றுக்கொள்வோம்” என்றார். “இஸ்லாமின் வழிகாட்டுதல்படியே ஓர் அரசு செயற்படவேண்டும், பெண்களின் கண்ணியம் மீட்டெடுக்கப்படவேண்டும், மற்ற கட்சிகளுடன் ஒத்துழைத்து ஜனநாயக முறைமைப்படி செயற்படுவோம்:” என்றார் அப்துல்ஹமீத்.
ஐரோப்பிய ஒன்றியம் (European Union), கார்ட்டர் சென்ட்டர், உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து 14,000க்கும் மேற்பட்ட உலகப் பொதுப் பார்வையாளர்கள் துனிஷியா தேர்தல் குறித்து திருப்தி தெரிவித்திருந்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் 90 சதவிகித வாக்காளர்கள் தம் ஜனநாயகக் கடமையை ஆற்றியிருந்தனர்.
துனிஷியாவைத் தொடர்ந்து புரட்சித்தீ பரவிய எகிப்து தனது பொதுத் தேர்தலை அடுத்தமாதம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்துள்ள லிபியாவிலும், இஸ்லாமிய அரசு அமைக்க விரும்புவதாக இடைக்கால ஆட்சிக் குழுவின் தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல் அறிவித்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக